அதிகார சுகத்தை அனுபவித்தவர்கள் பொருளாதார உதவி செய்ய வேண்டும் பொதுக்குழுவில் முனுசாமி வலியுறுத்தல்
அதிகார சுகத்தை அனுபவித்தவர்கள் பொருளாதார உதவி செய்ய வேண்டும் பொதுக்குழுவில் முனுசாமி வலியுறுத்தல்
ADDED : டிச 16, 2024 12:44 AM
சென்னை: ''ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு வகித்து, பதவி சுகத்தை அனுபவித்த நிர்வாகிகள் மனமுவந்து, கட்சியில் உழைக்கின்ற மற்ற நிர்வாகிகளுக்கு பொருளுதவி தர வேண்டும்,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி தெரிவித்தார்.
கட்சி பொதுக்குழுவில் அவர் பேசியதாவது:
சட்டசபை தேர்தலை சந்திக்க, இன்னும் 16 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 500 வாக்குறுதிகளை கொடுத்து, மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்தார்; மூன்றரை ஆண்டில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
மாறாக தன் வாரிசை, தி.மு.க.,வுக்கு தலைமை ஏற்கும் சூழலை ஏற்படுத்த, துணை முதல்வர் பதவி கொடுத்துள்ளார்.
முன்னோடிகளை ஒதுக்கி வைத்து, தன் மகனை மூன்றாவது இடத்தில் அமர வைத்துள்ளார். அரசியல் ரீதியாக அவர் வீழ்ந்து விட்டார். தேர்தலுக்கு அடுத்த 16 மாதங்களில், நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். மாவட்டச் செயலர்கள், கீழே உள்ளவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில், சுவர் விளம்பரம் குறைந்துள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ள சூழலில், அவர்கள் பிறந்த நாளில், மாநிலம் முழுதும் சுவர் விளம்பரங்கள் எழுத வேண்டும்.
இதை செய்ய, சில ஒன்றிய செயலர்களிடம் பண வசதி இல்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு உறுதுணையாக மாவட்டச் செயலர்கள், ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு வகித்து, பதவி சுகத்தை அனுபவித்த நிர்வாகிகள், மனமுவந்து உழைக்கின்ற நிர்வாகிகளுக்கு பொருளுதவி தர வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலர், அந்த மாவட்ட பிரச்னைகளை கையில் எடுத்து, குறைந்தது 10 ஆர்ப்பாட்டங்களையாவது, அடுத்த 16 மாதங்களில் நடத்த வேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டம் வெற்றி பெற, தொண்டர்களின் உணர்வுகளை ஏற்று, அவர்களுக்கு ஏற்ற பொருளாதார உதவியை செய்ய வேண்டும். முறையாக வண்டி கொடுத்து, அன்றைய உணவு, மற்ற செலவுகளை முழுமையாக கொடுத்து, ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்போது தான் அரசியல் களம் சூடு பிடிக்கும்.
தி.மு.க.,வுக்கு எதிரி அ.தி.மு.க., என மக்கள் பேசுவர். ஆட்சியை விட, கூட்டணியை ஸ்டாலின் முழுமையாக நம்புகிறார்; கூட்டணி பலமாக உள்ளது என்கிறார்.
நம் பொதுச்செயலர், அ.தி.மு.க., தொண்டர்களின் உழைப்பை நம்பி இருக்கிறார். அனைவரும் உழைத்தால், தி.மு.க., கூட்டணி தலைவர்கள், பொதுச்செயலர் பழனிசாமியை தொடர்பு கொள்வர்; இல்லம் நோக்கி வருவர்.
பொருளாதாரம் இல்லையென்றால், கடன் வாங்கி கட்சிக்கு செலவழியுங்கள். மீண்டும் நம் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும்.
இவ்வாறு முனுசாமி பேசினார்.