'முரசொலி' அலுவலக நில விவகாரம்: ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
'முரசொலி' அலுவலக நில விவகாரம்: ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : பிப் 13, 2024 07:13 AM
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில், 12 கிரவுண்ட் நிலத்தில், தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியின் அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த நிலம், ஆதிதிராவிட சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலம் என, பா.ஜ., பிரமுகர் சீனிவாசன், தேசிய ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, முரசொலி நிர்வாகத்துக்கு, 2019நவம்பர், டிசம்பரில் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரித்தநீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 'நிலத்தின் தன்மை குறித்த உண்மையைகண்டறிய, ஆணையம் விசாரிக்க வேண்டியது உள்ளது.
சம்பந்தப்பட்டவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி, விசாரித்து, உரிய உத்தரவை ஆணையம் பிறப்பிக்க வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின்உத்தரவை எதிர்த்து, முரசொலி அறக்கட்டளை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்றுவிசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''நில உரிமை குறித்து தீர்மானிக்க, ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை; பட்டா நிலம் என முந்தைய அரசே, ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளது,'' என்றார்.
ஆணையம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன்ஆஜரானார்.
மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க ஆணையத்துக்கு, அரசுக்குஉத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 11க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.
'மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என, ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுந்தரேசனிடம் முதல் பெஞ்ச் அறிவுறுத்தியது.