3 மாதத்தில் கொலைகள் குறைந்தன: டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அறிக்கை
3 மாதத்தில் கொலைகள் குறைந்தன: டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அறிக்கை
ADDED : ஏப் 25, 2025 06:17 AM

சென்னை: 'முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, மூன்று மாதத்தில் கொலைகள் குறைந்துள்ளன' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
இதுகுறித்து, டி.ஜி.பி., அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நடந்த கொலை வழக்குகள் குறித்து பகுப்பாய்வு செய்ததில், 2017 - 2020ம் ஆண்டுகளில் கொலைகள் அதிகம் நடந்துள்ளது தெரியவந்தது. அதிகபட்சமாக, 2019ல் மாநிலம் முழுதும், 1,745 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. 2021க்கு பின், ஒவ்வொரு ஆண்டும் கொலைகள் குறைந்து வருகின்றன, கடந்த, 12 ஆண்டுகளில், எந்த ஒரு ஆண்டையும் விட, 2024ல் குறைந்த அளவாக, 1,563 கொலை வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக, ஆறு ஆண்டுகளில், அவர்கள் தொடர்பான கொலைகளும் குறைந்து உள்ளன. கடந்தாண்டு, ஜனவரி முதல் மார்ச் வரை, 354 கொலைகள் நடந்துள்ளன. போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, இந்த ஆண்டில் அதே மூன்று மாத காலத்தில், 340 கொலைகளாக குறைக்கப்பட்டுள்ளன.
மற்ற ஆண்டுகளை காட்டிலும் அதிகபட்சமாக, 2024ல், 3,645 ரவுடிகள், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஏ பிளஸ், ஏ, பி, சி வகை ரவுடிகளின் எண்ணிக்கையும், 50 சதவீதம் குறைந்துள்ளது. நீதிமன்றங்கள் வாயிலாக, 242 ரவுடிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. 68 ரவுடிகளின் ஜாமின் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது, 12 ஆண்டுகளில் செய்யப்பட்ட அதிகபட்ச ஜாமின் ரத்தாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

