சாலமன் பாப்பையாவுக்கு முருக பக்தர்கள் கண்டனம்; திருப்பரங்குன்றம் தீபம் பற்றிய சர்ச்சை கருத்து எதிரொலி
சாலமன் பாப்பையாவுக்கு முருக பக்தர்கள் கண்டனம்; திருப்பரங்குன்றம் தீபம் பற்றிய சர்ச்சை கருத்து எதிரொலி
UPDATED : ஜன 28, 2026 01:04 AM
ADDED : ஜன 28, 2026 12:31 AM

மதுரை: மதுரையில் நடந்த பட்டிமன்றத்தில், திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரம் குறித்து பேசிய பேராசிரியர் சாலமன் பாப்பையா, 'மலை உச்சியில் தீபம் ஏற்ற கடவுள் முருகன் வந்து தான் சொல்ல வேண்டும்' என கூறிய சர்ச்சை கருத்துக்கு முருக பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுரை முருக பக்தர்கள் சபையை சேர்ந்தவர்கள் கூறியதாவது: மதுரையைச் சேர்ந்த சாலமன் பாப்பையாவின் பேச்சு, மதுரை மக்களின் மனதை காயப்படுத்திவிட்டது. அவர் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார். நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பை கொச்சைப்படுத்தி விட்டார். ஏனென்றால், அவர் நடுவராக பேசும்போது, திருப்பரங்குன்றம் தீபம் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.
'திருப்பரங்குன்றம் தீபத்தை காலம் காலமாக ஓரிடத்தில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர். 'அதற்கு பதில், மலை உச்சியில் ஏற்ற வேண்டும் என்று சொன்னால், அதற்கு யார் வந்து சொல்ல வேண்டும்; கடவுள் முருகன் வந்து தான் சொல்ல வேண்டும்' என்ற உங்களின் கருத்தை கண்டிக்கிறோம்.
திருப்பரங்குன்றம் மலைக்கு சொந்தக்காரர் முருகன். அவருக்கு சொந்தமான மலை என தீர்ப்பு வழங்கிய பின், தீபத்தை மலை உச்சியில் ஏற்றினால் என்ன; அதில் ஏன் உங்களுக்கு வருத்தம்? உங்களது விஷம பேச்சு கண்டிக்கத்தக்கது. மூன்று நீதிபதிகள் கொண்ட தீர்ப்பை ஏளனம் செய்திருக்கிறீர்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கையில், 'சாலமன் பாப்பையா பேசிய பேச்சு ஹிந்துக்கள் மனதை காயப்படுத்தி விட்டது; நீதிமன்றத்தை அவமதித்துவிட்டது. நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பை கொச்சைப்படுத்தி விட்டது. 'அவர் மீது வைத்திருந்த மதிப்பையும், மரியாதையையும் இழந்து விட்டார்' என குறிப்பிட்டுள்ளார்.

