முருகா... முருகா! தைப்பூச விழாவில் முருகன் கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் வெள்ளம்!
முருகா... முருகா! தைப்பூச விழாவில் முருகன் கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் வெள்ளம்!
UPDATED : பிப் 11, 2025 10:55 AM
ADDED : பிப் 11, 2025 08:28 AM

சென்னை; தைப்பூசத்தை முன்னிட்டு அரோகரா முழக்கத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர், பழநி முருகன் கோவில்களில் திரண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.
தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.வடபழநியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநியில் தைப்பூசம் களைகட்டி உள்ளது. இங்குள்ள பெரியநாயகியம்மன் கோவிலில் பிப்.5ல் கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று (பிப்.11) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி முருகனை தரிசிக்க பழநி நகரில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
நேற்று மாலை முதல் நடை பயணமாகவும், காவடி, ஒயிலாட்டம், மயிலாட்டம் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநியை நோக்கி திரள ஆரம்பித்துள்ளனர். காவடியாட்டம், தேவராட்டம் என பக்தர்கள் திரண்டது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. வழிநெடுகிலும் பாத யாத்திரை சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே திரண்டிருந்த தன்னார்வலர்கள் உணவு, தண்ணீர் கொடுத்தனர்.
பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒட்டன்சத்திரம்-பழநி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர், கோவிலுக்கு வரும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
இதேபோல, திருச்செந்தூரிலும் முருகனை தைப்பூச விழாவில் தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு, தீர்த்த வாரி நடைபெற்றது. நேரம் செல்ல, செல்ல பக்தர்கள் திரளாக வந்து கொண்டிருப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் விரிவுபடுத்த ஆரம்பித்துள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் குவிந்த பக்தர்கள், சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருத்தணி, சுவாமிமலையிலும் முருகனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி பக்தர்கள் குவிந்தனர்.