ADDED : மார் 18, 2024 12:36 AM
சென்னை: ஈரோடு மாவட்டம் கொடுமணலில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்த, அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியத்தில், காவிரியின் துணை ஆறான நொய்யலின் வடகரையில் உள்ளது கொடுமணல். இது, சங்க இலக்கியங்களில் கொடுமணம் என, குறிப்பிடப்பட்டு உள்ளதுடன், அக்காலத்தில் வணிகத்திலும், தொழில்களிலும் சிறந்து விளங்கியுள்ளது.
இந்த ஊரானது கிழக்கே சேர மன்னர்களின் தலைநகரான கரூர், மேற்கில் சிறந்த துறைமுகமான முசிறியுடன் இணைக்கும் பெருவழிச்சாலையில் இருந்துள்ளது.
இங்கு, புதுச்சேரி பல்கலை, தஞ்சை தமிழ் பல்கலை, தமிழக தொல்லியல் துறை ஆகிய வற்றின் சார்பில், பலகட்ட அகழாய்வுகள் நடந்துள்ளன.
அவற்றில், தமிழி என்ற தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சுடுமண் பொருட்கள், விலங்குகளின் எலும்புகள், வெளிநாட்டு மண்பாண்ட ஓடுகள், இரும்பு, பாசி மணிகள், வளையல்கள் செய்யும் தொழிற்சாலைகளுக்கான உலைகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்தன.
மேலும், இரும்பு ஈட்டிகள், செப்பு சிலைகள், ரோமானியர் காசுகள் உள்ளிட்ட அரிய பொருட்களும் கிடைத்தன. அவை, 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது, அறிவியல் முறை பகுப்பாய்வுகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருட்களையும், அவற்றின் வரலாறுகளையும், ஈரோடு மாவட்ட மக்களும் தமிழக மக்களும் அறியும் வகையில் அருங்காட்சியகம் அமைத்து காட்சிப் படுத்த தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம்தேர்வு, வடிவமைப்பு உள்ளிட்ட பணிகள் விரைவில் துவங்க உள்ளன.

