முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி: ஆகஸ்ட் 30 வரை அனுமதி இலவசம்
முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி: ஆகஸ்ட் 30 வரை அனுமதி இலவசம்
UPDATED : ஆக 25, 2024 04:43 PM
ADDED : ஆக 25, 2024 04:25 PM

பழநி: பழநியில் நடக்கும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு கண்காட்சியை ஆக.,30 வரை இலவசமாக பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை பழநியில் நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் துவக்கி வைத்தார். இரண்டாம் நாள் மற்றும் நிறைவு நாளான இன்று காலை 8 மணிக்கு திருவேல் இறைவன் தீத்தமிழ் இசை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்கி நடந்தது.
மாநாட்டினை முன்னிட்டு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி வளாகத்தில் சிறப்புக் கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியை அனைவரும் பார்வையிடும் வகையில் வரும் ஆகஸ்ட் 30 வரை வரை திறந்திருக்கும் எனவும் அனுமதி இலவசம் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும், இந்த மாநாட்டில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
உதயநிதி உரை
இம்மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அமைச்சர் உதயநிதி பேசியதாவது: இது திடீரென நடத்தப்பட்ட மாநாடு அல்ல. தி.மு.க., ஆட்சியில் 6 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. 3 ஆண்டுகளில் 1,400 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. 3,800 கோடி ரூபாயில் 8,500 கோயில்களில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. பக்தர்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கப்படுகிறது. திராவிடம் யாரையும் ஒதுக்காது. திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பது ஹிந்து சமய அறநிலையத்துறை இந்தியா முழுதுக்கும் வழிகாட்டுகிறது. இம்மாநாடு ஆன்மிக மாநாடாக மட்டுமல்லாமல் கலாசார மாநாடாகவும் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.