" எனது பேச்சில் உள்நோக்கம் இல்லை" : ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு
" எனது பேச்சில் உள்நோக்கம் இல்லை" : ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு
UPDATED : செப் 08, 2024 10:52 AM
ADDED : செப் 08, 2024 10:37 AM

சென்னை: ‛‛ எனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை '' என போலீசிடம் ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கூறியுள்ளதாக தெரிகிறது.
சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், 'பரம்பொருள் அறக்கட்டளை' என்ற அமைப்பை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர், சமீபத்தில் ஆற்றிய சொற்பொழிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. மகாவிஷ்ணுவின் பேச்சு தங்களை அவமதிப்பதாக இருப்பதாக, மாற்றுத்திறனாளி விஜயராஜ் என்பவர், சைதாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
போலீஸ் விசாரணையில் மகா விஷ்ணு கூறியதாக வெளியாகி உள்ள தகவல்: கடந்த காலங்களில் நான் இதுபோன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி உள்ளேன். விழிப்புணர்வு ஏற்படுத்தவே பேசினேன். நல்வழிப்படுத்துவதே எனது நோக்கம். எனது பேச்சில் எந்த உள்நோக்கமும் கிடையாது. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. என்னை சித்தர்கள் வழிநடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.
'மகா விஷ்ணுவை கைது செய்ய 200 போலீசார் தேவையா'
ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் வாயிலாக, நேற்று காலை சென்னை வந்த மகாவிஷ்ணுவை பிடிக்க விமான நிலையத்தில் 200க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். விமான நிலைய வாயிலுக்கு வந்த அவரை, போலீசார் பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்று, பின் கைது செய்தனர். மகாவிஷ்ணு நண்பர்கள் கூறியதாவது: அசோக் நகர் பள்ளியில் பேசிய மகாவிஷ்ணுவின் பேச்சு சர்ச்சையான போது அவர், ஆஸ்திரேலியாவில் இருந்தார். இருந்தபோதும், சென்னை திரும்பி வந்து, போலீசாருக்கு உரிய விளக்கம் அளிப்பதோடு, விசாரணைக்கும் ஒத்துழைப்பேன் என்று கூறி வீடியோ வெளியிட்டார். சொன்னபடியே சென்னை திரும்பினார். ஆனால், அவரை தீவிரவாதியை கைது செய்வது போல, 200 போலீசாரை வைத்து கைது செய்திருப்பது நல்ல போக்கு அல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.