காங்., நிர்வாகி மரணத்தில் மர்மம்: புது கடிதத்தால் மேலும் குழப்பம்; தற்கொலையாக இருக்குமோ ?
காங்., நிர்வாகி மரணத்தில் மர்மம்: புது கடிதத்தால் மேலும் குழப்பம்; தற்கொலையாக இருக்குமோ ?
UPDATED : மே 05, 2024 04:57 PM
ADDED : மே 05, 2024 11:49 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. கொலை மிரட்டல் இருப்பதாக அவர் ஒரு கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது பண விவகாரம் தொடர்பாக எழுதியுள்ள புது கடிதத்தால் மேலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்கொலையாக இருக்குமோ என்ற கோணத்தில் ஆரம்பக்கட்ட விசாரணையை போலீசார் துவக்கி இருப்பதாக ஒரு தகவல் பரவுகிறது.
திசையன்விளை அருகே கரைச்சுத்து புதுாரில் அவரது வீட்டின் அருகே உள்ள தனது தோட்டத்தில் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கல் , தொழில்போட்டி, அரசியல் முன்விரோதம் என பல கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கொலையா தற்கொலையா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் முழு விவரம் தெரியவரும்.
கட்சி ரீதியாக விசாரணை
உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் விசாரித்து வந்தாலும் கட்சி ரீதியாக விசாரிக்க நாங்களும் ஒரு கமிட்டி அமைத்துள்ளோம். இதனை விசாரித்து கட்சியின் தலைமைக்கு அறிக்கை அனுப்பி வைப்போம் என மாநில காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இந்நிலையில் அவரது மருமகன் ஜெபாவுக்கு , ஜெயக்குமார் ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு 16 நபர்கள் லட்சக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். அவர்களிடம் பணத்தை வசூலிக்க வேண்டும்.
என்னை மன்னிக்கவும் !
தனது பிரச்னையை மனதில் வைத்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர்களை யாரும் பழிவாங்க வேண்டாம். மகள் கத்ரீன் திருமணத்தை டாக்டர் செல்வக்குமார் உள்பட அனைவரும் சிறப்பாக நடத்தி கொடுத்தீர்கள். என் அன்பு உங்கள் மீது எப்போதும் உண்டு. ஜெயந்திக்காகவும், பிள்ளைகளுக்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள். ஜெயந்தியிடம் எதுவும் சொல்லவில்லை. ஜெயந்தியிடம் மன உளைச்சல் காரணமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியனிடம் 4 சதவீதம் வட்டிக்கு ரூ.5லட்சம் வாங்கியுள்ளேன். அவரிடம், ரூ.5 லட்சம் கொடுத்து விட்டு காசோலையை திரும்பப் பெற வேண்டும்.
* ஆனந்த ராஜா எழுதி கொடுத்த நில பிரச்னை ஏற்பட்டால், 46 லட்சம் 18 வருட வட்டியோடு வசூல் செய்ய வேண்டும்.
* இடையங்குடி பள்ளி தொடர்பாக, ஜெயங்கிரிடம் ரூ.30 லட்சம் 4 வருட வட்டியோடு வசூலிக்க வேண்டும்.
* சேசு ராஜாவிடம் இருந்து தார் பிளாண்ட் பிரச்னை தொடர்பாக, ரூ.24 லட்சம் வாங்க வேண்டும்.
* உவரி அந்தோணி சாமி வீட்டு வேலை பாக்கி தொகை ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை 4 வருட வட்டியோடு வசூல் செய்ய வேண்டும்.
* உவரி ஜெனிபர் வீட்டு வேலை பாக்கி தொகை ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை 4 வருட வட்டியோடு வசூல் செய்ய வேண்டும்.
* மைதி போர்ட் கம்பெனி சேக்ஸ்பியரிடம் ரூ.6 லட்சம் 3 வருட வட்டியோடு வாங்க வேண்டும்.
* வடக்கன் குளம் மாணிக்கம் இடம் 16 லட்சம் 3 சதவீத வட்டிக்கு வாங்கி உள்ளேன். செக்குகள் கொடுத்துள்ளேன். 1 வருடமாக வட்டி கொடுக்கவில்லை. அவர் மிகவும் பாவம். பணம் கொடுத்து செக்குகள் வாங்க வேண்டும்.
* இடிந்தக்கரை பென்சிகனிடம் ரூ.10 லட்சம் வட்டிக்கு வாங்கி உள்ளேன். அவர் வட்டி வேண்டாம் என சொல்லிவிட்டார். அவருக்கு பணத்தை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.