தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பு ஏற்றார் நயினார் நாகேந்திரன்
தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பு ஏற்றார் நயினார் நாகேந்திரன்
UPDATED : ஏப் 12, 2025 08:33 PM
ADDED : ஏப் 12, 2025 06:11 PM

சென்னை: தமிழக பா.ஜ.,வின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
தமிழக பா.ஜ.,வில் ஜன.,31க்குள் நடக்க வேண்டிய மாநிலத் தலைவர் தேர்தல் மட்டும் தாமதமாகி வந்தது. மாநிலத் தலைவர் தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் நேற்று நடந்தது. மதியம்2:00 மணி முதல் 4:00 மணி வரை தலைவர் பதவிக்கு மனு கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
பா.ஜ., தேசிய பொதுச் செயலர் தருண் சுக்கிடம், சட்டசபை பா.ஜ., குழு தலைவர் நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்தார். மாநில தலைவர் பதவியில் இருந்து விலகும் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன், மகளிரணி தேசிய தலைவர் வானதி, முன்னாள் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் எச். ராஜா உள்ளிட்டோர் நயினார்நாகேந்திரன் பெயரை முன்மொழிந்து கையெழுத்திட்டனர். நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு தாக்கல் அளித்ததால், அவர் தமிழக பா.ஜ., தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பொறுப்பேற்பு
இன்று சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த விழாவில், நயினார் நாகேந்திரன் , தமிழக பா.ஜ.,வின் புதிய தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதற்கான சான்றிதழை தேசிய பொதுச் செயலர் தருண் சுக், கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் அவரிடம் வழங்கினர்.
இலக்கு
முன்னதாக, பதவி விலகும் அண்ணாமலை பேசியதாவது:புதிய தலைவரை கட்சி அறிமுகப்படுத்துகிறது. 2026 ல் தீய சக்தி தி.மு.க.,வை துடைத்து எரிந்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும். நம் கண் முன்னால் உள்ள ஒரே இலக்கு. அதை நோக்கி போகும் போது தடை வருவது சகஜம்தான். பலம் வாய்ந்த கட்சி, தே.ஜ., கூட்டணியில் இணைந்துள்ளது. சிறிய, பெரிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன.
தேசிய அளவில் பிரதமர் மோடி, தே.ஜ., கூட்டணியை வழிநடத்துகிறார். தமிழகத்தில் தே.ஜ., கூட்டணியானது,2026 சட்டசபை தேர்தலை அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் தலைமையில் சந்திக்க உள்ளோம்.
எந்த திசையில், எந்த பாதையைநோக்கி போகிறோம் என உணர வேண்டும்.இன்று நமக்கு இலக்கு தெரியும் . திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். இலக்கும் தெரியும். பாதையும் தெரியும். பயணிக்கவேண்டிய தொண்டர்கள் இங்கு அமர்ந்து உள்ளோம்.
கடந்த 4 ஆண்டுகளில் உங்களை வழிநடத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. உங்களை வழிநடத்தியது பெரிய பாக்கியமாக கருதுகிறேன். பா.ஜ., தொண்டன் என்பது உச்சகட்ட பொறுப்பு என எப்போதும் சொல்வேன். நான் தலைவரான போது, பலருக்கு என்னை தெரியாது. நிறைய தொண்டர்களுக்கு கூட எனக்கு தெரியாது.
பாக்கியம்
என்னை விட திறமையான 99 சதவீதம் பேர் இந்த மேடையில் அமர்ந்து உள்ளனர். பா.ஜ., அடிப்படை உறுப்பினராக சேர்ந்த உடன், இத்தனை தலைவர்கள், திறமையானவர்கள், முகம் சுழிக்காமல் எதையும்பேசாமல் பொறுப்பை கொடுத்துவிட்டு தொண்டராக என்னுடன் நின்றனர். அதை விட பாக்கியம் என்ன வேண்டும்.இதற்கு முன் தலைவராக இருந்தவர்கள் ஒரு வார்த்தை கூட சொன்னது கிடையாது. அப்படிப்பட்ட கட்சியில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, 2026 ல் தே.ஜ., ஆட்சியை கொண்டு வருவதே நமது இலக்காக நின்று கொண்டு உள்ளோம். நயினார் நாகேந்திரனை, தமிழக பா.ஜ.,வின் புதிய தலைவராக கட்சி அறிவிக்கிறது. 2026ல் தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வர அவர் உழைப்பதற்கு நாம் துணை நிற்போம். இவ்வாறு அவர் பேசினார்.
நயினார் நாகேந்திரன் அரசியல் பயணம்
1960 அக்.,16ல் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தண்டையார் குளத்தில் பிறந்தவர்.
ஏம்.ஏ., பட்டம் பெற்றவர்.
1989 ல் அதிமுக.,வில் இணைந்தார். அதிமுக., பணகுடி நகரச் செயலாளராக அரசியல் பணணத்தை துவக்கினார். பிறகு இளைஞரணி செயலாளர், நெல்லை மாநகர் மாவட்ட ஜெ., பேரவைச் செயலாளர், மாநில ஜெ., பேரவை செயலாளர், தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் போன்ற பதவிகளை வகித்து உள்ளார்.
2001 நெல்லை சட்டசபை தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா ஆட்சியில் மின்சாரம், போக்குவரத்து, தொழில்துறை பதவிகளை வகித்து உள்ளார்.
2006 சட்டசபை தேர்தலில் தோல்வி
2011 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்.
2016ல் மீண்டும் தோல்வி
ஜெயலலிதா மறைவிற்குபிறகு 2017 ல் பா.ஜ.,வில் இணைந்தார். அவருக்கு மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது.
2019 லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
2021 சட்டசபை தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்தார். சட்டசபை குழு தலைவராக இருந்தார்.
2024 ல் நெல்லை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.