ADDED : நவ 12, 2024 01:12 AM

சென்னை: உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடல் திறன் கூட்டமைப்பு சார்பில், 15வது உலக ஆணழகன் போட்டி, கடந்த 5ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. மாலத் தீவில் நடந்த இப்போட்டியில், உலகின் பல நாடுகளிலிருந்து, 350க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், தமிழகத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் மணி, 90 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார்.
இதையடுத்து, 55 - 100 கிலோ எடை பிரிவில், தங்கம் வென்றவர்கள் இடையே நடந்த, 'சாம்பியன் ஆப் சாம்பியன்' போட்டியிலும் தங்கம் வென்ற சரவணன், இரண்டாம் முறையாக, 'மிஸ்டர் யுனிவர்ஸ்' பட்டத்தை வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தார்.
இதுபோல், 80 கிலோ எடை பிரிவில், தமிழகத்தைச் சார்ந்த மரிய ஜிஜோ வெள்ளி பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற இருவருக்கும், தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
சரவணன், சென்னை ஆலந்துாரில் பயிற்சி பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.

