தேசமே அத்வானிக்கு முதன்மை: ஹிந்து முன்னணி புகழாரம்
தேசமே அத்வானிக்கு முதன்மை: ஹிந்து முன்னணி புகழாரம்
ADDED : பிப் 05, 2024 07:12 AM

திருப்பூர்: 'அத்வானிக்கு தேசமே என்றும் முதன்மையாக இருந்துள்ளது' என, ஹிந்து முன்னணி பாராட்டியுள்ளது.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
துணை பிரதமராக இருந்த அத்வானி, சிறுவயது முதலே தேசத்துக்கும், தேசியத்துக்கும் தொண்டாற்றி வருபவர். மதத்தின் பெயரால் பாரதம் துண்டாடப்பட்ட போது, அதன் துர்பாக்கிய சம்பவங்களை நேரில் அனுபவித்தார். பள்ளி ஆசிரியராக தன் பொது வாழ்வை துவக்கியவர்.
ஸ்ரீ ராம ஜென்ம பூமி மீட்பு போராட்டத்தின் போது, போலி மதச்சார்பின்மை பேசி, ஹிந்துக்களின் உரிமையை, நியாயத்தை அரசியல் கட்சிகள் நசுக்கிய போது, ஹிந்துக்கள் தரப்பு நியாயத்தை, உரிமையை மீட்க, ஜனநாயக வழியில் ரத யாத்திரை நடத்தி, ஹிந்துக்களுக்கு நீதியின் மீது நம்பிக்கை ஏற்படுத்தியவர்.
இன்று ராமருக்கு அயோத்தியில் கோவில் அமைந்துள்ளதில், அத்வானியின் பங்கு மகத்தானது. தன் மீது லஞ்சம் பெற்றதாக வீண் பழி சுமத்திய போது, தான் வகித்த எல்லா பதவிகளிலிருந்தும் விலகி, நீதிமன்றத்தில் நிரபராதி என நிரூபித்து, என்றும் அரசியல் துாய்மைக்கு எடுத்துக்காட்டாக நடந்தவர் அத்வானி.
அவரது நீண்ட நெடிய அரசியல் வாழ்விலும், தேசமே முதலானதாக இருந்துள்ளது. அவருக்கு, பாரத தேசத்தின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' அளித்துள்ளதை, ஹிந்து முன்னணி வரவேற்கிறது; பாராட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

