தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: நயினார் நாகேந்திரன் உறுதி
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: நயினார் நாகேந்திரன் உறுதி
ADDED : அக் 09, 2025 01:29 PM

திருநெல்வேலி: தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பறப்பதை கவனித்தேன். அது தொண்டர்களாக ஒன்று சேரும் ஒரு விஷயம். அதுபோல் ஒட்டுமொத்த தமிழக மக்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓரணியில் திரளப் போவது உறுதி.
விஜய் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று பார்த்தால் பொதுமக்கள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பு இருக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும், அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற கோணத்திலும் பார்க்க வேண்டும்.
தற்போது விஜய் கரூர் செல்வதற்கும் பாதுகாப்பு கேட்டு டிஜிபிக்கு மெயில் அனுப்பியிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. தேர்தல் பிரசாரம், சுற்றுப்பயணங்கள் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஒரு கட்சியில் இருப்பவர் அடுத்த கட்சி ஜெயிக்கும் என்று சொல்ல முடியாது என்பதால் அவர் அப்படி கூறியிருக்கிறார். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்.
தமிழகத்தில் ஆசிரியர் சங்கங்கள், துப்புரவுப் பணியாளர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் எனப் பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதற்கு அரசு பதில் அளிக்கவில்லை என்றாலும், 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் ஒட்டுமொத்தமாகப் பதிலளிப்பார்கள், அது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்ற பதிலாக இருக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரிய கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் இணைய வாய்ப்புள்ளது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.