மாஞ்சோலை தேயிலை தோட்ட நிர்வாகத்திடம் தேசிய மனித உரிமை ஆணைய குழு விசாரணை
மாஞ்சோலை தேயிலை தோட்ட நிர்வாகத்திடம் தேசிய மனித உரிமை ஆணைய குழு விசாரணை
ADDED : செப் 22, 2024 03:33 AM
அம்பாசமுத்திரம்:மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள் பி.பி.டி.சி., நிர்வாகத்தினரிடம் விசாரித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலையில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக எழுந்த புகாரையடுத்து, உண்மை நிலைய கண்டறிய தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள் டி.எஸ்.பி., ரவி சிங்.
இன்ஸ்பெக்டர் யோகேந்திர குமார் திரிபாதி இரண்டு நாட்கள் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்தில் தோட்ட தொழிலாளர்கள், தொழிற் சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள், ஒய்வு பெற்ற தொழிலாளர்களிடம் தனித்தனியாக விசாரித்தனர்.
நாலுமுக்கில் மூடப்பட்ட தேயிலை பேக்டரியை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். இந்நிலையில், நேற்று ஆணைய அதிகாரிகள் மணிமுத்தாறு சிறப்பு நிலை டவுன் பஞ்., அலுவலகத்தில் மாஞ்சோலை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் குழு மேலாளர் திம்மையா, சிங்கம்பட்டி துணை குழு மேலாளர் பட்டாசாரியா, துணை நிர்வாக மேலாளர் சவுமியா வெங்கடாசலம், அலுவலக நிர்வாகம் ஜான் செல்வராஜ், பிரிவு அலுவலர் வில்சன் கிருபா துரை, கள கண்காணிப்பாளர் எபினேசன் பாபுவிடம் கூட்டாக விசாரணை நடத்தினர்.
இதனிடையே, டி.எஸ்.பி., ரவி சிங்கிடம் நெல்லை மாவட்ட தேசிய தோட்ட தொழிலாளர்கள் சங்க இணை பொது செயலாளர் மாஞ்சோலை ராமலிங்கம், தொழிலாளர்களின் விருப்ப ஓய்வு தொகை தொடர்பாக மனு அளித்தார். சங்கர் நகர் சமூக ஆர்வலர் முத்துராமனிடம் புகார்களை எழுத்து பூர்வமாக தருமாறு ரவி சிங் கூறினார்.
முன்னதாக, மணிமுத்தாறு ஒன்பதாவது பட்டாலியன் கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்த ஆணைய அதிகாரிகள் மாஞ்சோலை முன்னாள் தோட்ட தொழிலாளியும், டவுன் பஞ்., தலைவருமான அந்தோணியம்மாளை அழைத்து விசாரித்தனர்.
அவரிடம், எஸ்டேட் எப்போது வந்தது. எத்தனை தலைமுறையாக மாஞ்சோலையில் உள்ளீர்கள், என்ன பிரச்னை, எதனால் பிரச்னை என பல்வேறு கேள்விகளை எழுப்பி பதில் பெற்றனர். முன்னாள் தொழிலாளியான அவரது கணவர் ஜெயபாலிடமும் விசாரித்தனர்.