முருகனின் அறுபடை வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட நவாஸ் கனி ஆதரவாளர்கள்
முருகனின் அறுபடை வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட நவாஸ் கனி ஆதரவாளர்கள்
UPDATED : ஜன 23, 2025 06:21 PM
ADDED : ஜன 23, 2025 12:12 AM

மதுரை:மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் மலையின் புனிதத்தை காக்கும் வகையில், அங்கு உயிர்ப்பலி கொடுத்து சமைத்து சாப்பிட, போலீசார் தடைவிதித்துள்ள நிலையில், ராமநாதபுரம் எம்.பி.,யும், வக்புபோர்டு வாரிய தலைவருமான நவாஸ் கனி ஆதரவாளர்கள் , மலைப் படிக்கட்டில் பிரியாணி சாப்பிட்டனர் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் மலையில், அங்குள்ள தர்காவில் ஆடு வெட்ட முயன்றதை, போலீசார் தடுத்தனர். 'வழிபடத் தடையில்லை; உயிர்பலி கொடுக்கத்தான் தடை' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதை பொருட்படுத்தாமல், கடந்த 18ல், ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து கொடுக்கப் போவதாக கூறி சில முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மலையேற முயன்றனர்.
இதற்கிடையே மலை மீதுள்ள சமணர் குகையை ஆக்கிரமிக்கும் நோக்கில், பச்சை பெயின்ட் அடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இச்சூழலில் நேற்றுமுன்தினம், நவாஸ் கனி எம்.பி., திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவை ஆய்வு செய்ய வந்தார். அங்குள்ள போலீசாரிடம், 'மலை மேல் உணவு கொண்டு போக எழுத்துப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளதா?' எனக் கேட்டார்; போலீசார் 'இல்லை' என்றனர்.
அவருடன் வந்தவர்கள், 'பார்சல் கொண்டு வந்து சாப்பிடவும் தடை உள்ளதா?' எனக் கேட்க, 'இல்லை' என போலீசார் கூறினர்.
இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட அவர்கள், தயாராக பார்சலாக வாங்கி வந்த பிரியாணியை, மலை படிக்கட்டுகளில் வைத்து அமர்ந்து சாப்பிட்டனர். இதற்கு, ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
புனிதமாகக் கருதப்படும் மலைமீது, உயிர்ப்பலி கொடுக்கக் கூடாது என்று, தொடர்ந்து போராடி வருகிறோம். அசைவ உணவை வேறு இடத்தில் சமைத்து எடுத்து வந்து மலையில் எந்த இடத்திலும் அமர்ந்து சாப்பிட்டாலும், அதுவும் புனிதத்தை பாதிக்கும் செயல்தான்.
காலம் காலமாக ஹிந்து - முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் இருந்து வரும் நிலையில், சில அமைப்புகளின் துாண்டுதலால், திருப்பரங்குன்றம் மலையை, பிரச்னையாக்கி வருகின்றனர்.
ஆதிகாலத்தில் இருந்து என்ன நடைமுறைகள் இருந்ததோ, அது தொடர வேண்டும். ஹிந்துக்களின் புனிதத்தை பாதிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் போராட தயங்க மாட்டோம். முருகன் மலையை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

