அ.தி.மு.க.,விடம் 50 தொகுதிகள் பெற அமித் ஷா வாயிலாக நயினார் முயற்சி
அ.தி.மு.க.,விடம் 50 தொகுதிகள் பெற அமித் ஷா வாயிலாக நயினார் முயற்சி
UPDATED : டிச 14, 2025 06:32 AM
ADDED : டிச 14, 2025 03:27 AM

சென்னை: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விடம் 50 தொகுதிகளை பெற, தமிழக பா.ஜ., முடிவு செய்துள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில், தனி அணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ., 18 சதவீத ஓட்டுகளை பெற்றது. இரண்டாவது இடம் எனவே, 'லோக்சபா தேர்தல் முடிவுகளை, சட்டசபை தொகுதி வாரியாக ஒப்பிட்டு பார்த்தால், 83 தொகுதிகளில் அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, பா.ஜ., இரண்டாவது இடம் பிடித்து உள்ளது.
அதன் அடிப்படையில் வரும் சட்டசபை தேர்தலில், 80 தொகுதிகளை அ.தி.மு.க.,விடம் கேட்க வேண்டும்' என, மேலிட தலைவர்களிடம், தமிழக பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சில தினங்களுக்கு முன் சந்தித்து பேசினார். அப்போது, இரு கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டுள்ளது.
கூட்டணியில் அ.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் தொகுதிகள் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது.
வெற்றி வாய்ப்பு அதன் அடிப்படையில், பா.ஜ., எதிர்பார்க்கும் தொகுதிகளை ஒதுக்க, அ.தி.மு.க., விரும்பவில்லை என தெரிகிறது.
பழனிசாமி தெரிவித்த கருத்துக்களை அமித் ஷாவிடம் தெரிவிக்க, நயினார் நாகேந்திரன் நேற்று டில்லி சென்றார். டில்லி செல்லும் முன், ஒரு மணி நே ரம் பழனிசாமியுடன், தொலைபேசியில் பேசியுள்ளார்.
எனவே, அ.தி.மு.க., தலைமையிடம், 75 தொகுதிகளை கேட்கும் வகையில், தொகுதி பங்கீட்டு பேச்சை துவக்க வேண்டும் என்றும், 50 தொகுதிகளை உறுதியாக பெற வேண்டும் என்றும் அமித் ஷாவிடம், நயினார் நாகேந்திரன் வலியுறுத்த இருப்பதாக தெரிகிறது.
மொடக்குறிச்சி, ஊட்டி, கோபிசெட்டிப்பாளையம், கிணத்துக்கடவு, கோவை வடக்கு, தென்காசி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கடலுார், காங்கேயம், மதுரை, அவிநாசி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், ஆரணி, கள்ளக்குறிச்சி, வேளச்சேரி, தி.நகர், திருக்கோவிலுார், திண்டுக்கல் ஆகிய, 20 தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. அந்த தொகுதிகளை கட்டாயம் கேட்டு பெறவும், அக்கட்சி முடிவு செய்துள்ளது.

