நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் 22 லட்சம் பேர் பங்கேற்பு
நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் 22 லட்சம் பேர் பங்கேற்பு
UPDATED : மே 04, 2025 07:29 PM
ADDED : மே 04, 2025 02:04 PM

சென்னை: நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று (மே 04) நடைபெற்றது. தேர்வில் மொத்தம் 22 லட்சம் பேர் பங்கேற்றனர்.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. நீட் நுழைவுத் தேர்வு இன்று (மே 4) நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு துவங்கிய இந்தத் தேர்வு, மாலை 5.20 மணி வரை நடந்தது.
நாடு முழுதும் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 5,453 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 22 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேரும் தேர்வில் பங்கேற்றனர்.
சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதினர். முன்னதாக, நீட் நுழைவுத்தேர்வை எழுத வந்த மாணவியர் நீண்ட வரிசையில் காத்திருந்து, அதன் பிறகு தேர்வை எழுதினர். தேர்வு எழுத வந்த மாணவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர்.

