'சோமாஸ்கந்தர் சிலையை மீட்பதில் அலட்சியம்!': பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு
'சோமாஸ்கந்தர் சிலையை மீட்பதில் அலட்சியம்!': பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு
ADDED : அக் 03, 2024 06:12 AM

சென்னை : சோமாஸ்கந்தர் சிலையை கண்டுபிடித்து விட்டதாக கூறும் விவகாரத்தில், பொய் தகவல் பரப்பப்படுவதாக, ஓய்வுபெற்ற ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் கூறினார்.
அவர் கூறியதாவது: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை, அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் இருப்பதை நான், 2018ல் கண்டுபிடித்து, நீதிமன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்துள்ளேன். ஆறு ஆண்டுகளுக்கு முன், நான் கண்டுபிடித்து தெரிவித்த சிலையை மீட்பதில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலட்சியமாக செயல்படுகிறது.
இதேபோன்று, தஞ்சை மாவட்டம் தீபங்குடியில் சமணர் சிலையை திருடியது யார், எங்கே உள்ளது என்பது உள்ளிட்ட விபரங்களையும் தெரிவித்துள்ளேன். அந்த சிலையையும் மீட்காமல் உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 50க்கும் மேற்பட்ட சிலைகள் குறித்து வழக்கு கூட பதிவு செய்யாமல் உள்ளனர். சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் மகள் மம்தா, சகோதரி சுஷ்மா ஷெரின், நீல்பெரி ஸ்மித் மற்றும் சிங்கப்பூரில் உள்ள பரமேஸ்வரி பொன்னுச்சாமி ஆகியோரை பிடித்தால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைளை மீட்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

