ADDED : டிச 15, 2024 11:15 AM

“சுயசரிதை எழுத போறாருங்க...” என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
“எந்த தலைவரை சொல்றீங்க பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“முன்னாள் எம்.பி.,யான மைத்ரேயனை தான் சொல்றேன்... பா.ஜ., - அ.தி.மு.க.,ன்னுமாறி மாறி பயணித்து, இப்போதைக்கு அ.தி.மு.க.,வில் மையம் கொண்டிருக்கும் இவர், தன் அரசியல் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைதொகுத்து புத்தகமா எழுத போறாருங்க...
“புத்தகத்துல இடம்பெறும் சில தகவல்களை, அப்பப்ப சமூக வலைதளங்கள்லயும் முன்னோட்டம் மாதிரி போட்டுட்டு இருக்காருங்க... இதுல, ஜெ., காலத்துல அவருடன் நடத்திய உரையாடல்கள்பற்றிய சுவாரஸ்யமான தகவல்களும் இருக்குமாம்...” என்றார்,அந்தோணிசாமி.
“மொட்டை பெட்டிஷன்களா போட்டு கலங்க அடிக்கறா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“எந்த துறையில வே...”என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
“மதுரை மாவட்ட பள்ளிக்கல்வி துறையில்இருக்கற அதிகாரிகளை பத்தி, வக்கீல்கள், மனிதஉரிமை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள்பெயர்கள்ல, லஞ்ச ஒழிப்புதுறை, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அடிக்கடி புகார்கள் பறக்கறது ஓய்...
“இந்த புகார்கள் தொடர்பா அதிகாரிகள் விசாரணை நடத்தினா, புகார் அனுப்பியவா அட்ரஸ் எல்லாம் போலின்னு தெரியறது...அதே நேரம், இந்த புகார்களால, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கறது தான், புகார்தாரர்களின் நோக்கமா இருக்கு ஓய்...
“நிறைய புகார்களை எடுத்து பார்த்தா, கையெழுத்து ஒரேமாதிரியாகவும், புகாரில்இடம்பெற்றுள்ள வாசகங்கள் கூட அச்சு பிசகாமலும் இருக்கு... இதனால, பள்ளிக்கல்வி துறைக்குள்ளயே இருக்கற சிலர் தான், தங்களுக்கு பிடிக்காத அதிகாரிகள் பத்தி இப்படி மொட்டை பெட்டிஷன் போடறான்னுதெரியுது ஓய்...” என்றார், குப்பண்ணா.
“தலைமை உத்தரவால,எம்.எல்.ஏ.,வுக்கு சமாதான கொடி காட்டியிருக்காரு வே...” என்றஅண்ணாச்சியே தொடர்ந்தார்...
“திருச்சி மாவட்டம் லால்குடியில், 2006ல இருந்து தி.மு.க., - எம்.எல்.ஏ.,வா, தொடர்ந்து இருக்கிறவர் சவுந்தரபாண்டியன்... இவருக்கும், மாவட்டத்தைச் சேர்ந்த சீனியர் அமைச்சரான நேருவுக்கும் ஏழாம் பொருத்தமா போச்சு வே...
“இதனால, கடந்த ஒன்றரை வருஷமா நேரு, லால்குடிக்கு எப்ப போனாலும், சவுந்தரபாண்டியனை அழைக்கிறது இல்ல... அமைச்சர் பங்கேற்கிற அரசு நிகழ்ச்சிகளுக்கு கூட எம்.எல்.ஏ.,வை யாரும் கூப்பிட மாட்டாவ வே...
“இப்ப, பெரம்பலுார் எம்.பி.,யாகி இருக்கிற நேருவின் மகன் அருணும்கூட, எம்.எல்.ஏ.,வை மதிக்காம தான் நடந்துக்கிட்டாரு... இது சம்பந்தமா, சமூக வலைதளங்கள்ல சவுந்தரபாண்டியன் பகிரங்கமாகவே தன் ஆதங்கத்தை தெரிவிச்சு, நேருவுக்கு எதிராகவும் கருத்துகளைபதிவிட்டாரு வே...
“இந்த சூழல்ல, இப்பஒரு மாசமா சவுந்தரபாண்டியனை எல்லா நிகழ்ச்சிக்கும் கூப்பிடுதாவ... 'தேர்தல் வர்றதால எல்லாரையும் அரவணைத்து பணியாற்றுங்க'ன்னு நேருவுக்கு கட்சி தலைமை உத்தரவு போட்டிருக்கு... அதனால தான், அப்பாவும், பிள்ளையும்இறங்கி வந்து, சவுந்தரபாண்டியனுடன் சகஜமாபழகுதாங்க'ன்னு மாவட்ட தி.மு.க.,வினர் சொல்லுதாவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.