புதிய பாரதம் திட்டத்தில் இன்று 5 லட்சம் பேருக்கு எழுத்தறிவு தேர்வு
புதிய பாரதம் திட்டத்தில் இன்று 5 லட்சம் பேருக்கு எழுத்தறிவு தேர்வு
ADDED : நவ 10, 2024 06:01 PM

சென்னை: மத்திய அரசின் புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டப்படி, இன்று 5 லட்சம் பேர் பங்கேற்ற தேர்வு தமிழகத்தில் நடைபெற்றது.
நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதை கடந்தவர்களுக்கு எழுத்தறிவை பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசானது, புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் என்ற திட்டத்தை 2022ம் ஆண்டு அறிமுகம் செய்தது. 2027ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்க இந்த திட்டத்தின் கீழ் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் 10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து 2024-25ம் ஆண்டில் எழுத படிக்க, தெரியாத 5,33,100 பேருக்கு அடிப்படை கல்வி வழங்க முடிவு செய்யப்பட்டது.
இருகட்டங்களாக நடைமுறைப்படுத்தும் வகையில், முதல் கட்டமாக கடந்த ஜூலை 15ம் தேதி தமிழகம் முழுவதும் கற்போர் மையங்கள் தொடங்கப்பட்டது. 6 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பயிற்சி பெற்றவர்களில் 5 லட்சத்து 9459 பேருக்கு இன்று தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற்றது. கிட்டத்தட்ட 30 ஆயிரம் மையங்களில் தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தந்த மையங்களில் நடைபெற்ற எழுத்தறிவு தேர்வில் விண்ணப்பித்தவர்கள் பங்கேற்று மிகுந்த ஆர்வத்துடன் தேர்வை எழுதினர்.