ADDED : ஜன 25, 2024 12:57 AM
சென்னை:அமைச்சர் சுப்பிர மணியன் வெளியிட்ட அறிக்கை:
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில், 100 இடங்களுடன் கூடிய செவிலியர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதுவும், மாணவர் விடுதியும், 1996ல் கட்டப்பட்ட பழைய கட்டடத்தில் இயங்கி வருகின்றன.
ஆய்வு பொருட்கள், புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் போதுமான அளவு இருந்தாலும், பாதுகாக்கவோ, பயன்படுத்தவோ போதுமான கட்டமைப்பு வசதி இல்லை.
இதனால், செவிலியர் ஆசிரியர்கள் கற்பித்தலில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, 35.15 கோடி ரூபாய் மதிப்பில் செவிலியர் பயிற்சி பள்ளிக்கு கட்டடம் கட்டப்பட உள்ளது.
அதேபோல, சென்னை சித்தா அரசு மருத்துவக் கல்லுாரி பட்ட மேற்படிப்பு மாணவியருக்கான விடுதிக்கு 2.59 கோடி ரூபாய்.
மாணவர்களின் கல்விசார் பயிற்சி கூட கட்டடத்திற்கு 2.20 கோடி ரூபாய்; யுனானி மருத்துவக் கல்லுாரியில் மாணவியருக்கான விடுதிக்கு 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், 40.09 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடங்களுக்கு, நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.