ADDED : ஜூலை 25, 2025 02:00 AM
சென்னை:முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு நடுநிலைப் பள்ளியில், புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்ட நிலையில், பயன்பாட்டிற்கு வந்த மூன்று மாதங்களில், வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் ஐந்து மாணவ, மாணவியர் காயமடைந்துள்ளனர்.
அடுத்து ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த கூகலுாரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டடத்தின் மேற்கூரை, கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டிற்குள் இடிந்து விழுந்துள்ளது. இதன் வழியே, தி.மு.க., ஆட்சியில் கட்டப்படும் கட்டடங்கள் தரமற்றவை என்பது தெளிவாகிறது.
தி.மு.க., ஆட்சியில், புதிய கட்டடங்களே இடிந்து விழும் அவல நிலை உருவாகி இருக்கிறது. அனைத்து புதிய கட்டடங்களும், இதே நிலைமையில்தான் இருக்கின்றனவா என்ற சந்தேகம், பெற்றோர் இடையே நிலவுகிறது. அந்த அளவுக்கு, தமிழகத்தில் ஊழல் தலை விரித்தாடுகிறது.
ஆனால், முதல்வர் திராவிட மாடல் ஆட்சி என விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஒரு வேளை சில மாதங்களிலேயே, புதிய கட்டடங்கள் இடிந்து விழுவதுதான், திராவிட மாடல் ஆட்சி போலும். முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, பள்ளிகளில் மேற்கூரை, ஒரு சில மாதங்களில் இடிந்து விழுவதற்கு காரணமான, ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.