ADDED : மே 29, 2025 02:15 AM

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தானுக்கும்; ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, சென்னைக்கும் பணியிட மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், சென்னை, ராஜஸ்தான், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
பரிந்துரை
இதன்படி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார்.
இதேபோல், திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங், தெலுங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும்; ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எஸ்.ராமச்சந்திர ராவ், திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.
இதுதவிர, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அன்ஜாரியா, குவஹாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.சந்துருகர் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், ம.பி., உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் சச்தேவ், அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும்; டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விபு பாகரு, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும்; பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசுத்தோஸ் குமார், குவஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளனர்.
- நமது சிறப்பு நிருபர் -