சிறப்பு பிரிவில் 3 ஆண்டு பணி; போலீசாருக்கு புது நிபந்தனை
சிறப்பு பிரிவில் 3 ஆண்டு பணி; போலீசாருக்கு புது நிபந்தனை
ADDED : அக் 01, 2024 02:49 AM

சென்னை : சி.பி.சி.ஐ.டி., உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில், போலீசாருக்கு மூன்று ஆண்டுகளுக்கு கட்டாய பணி ஒதுக்க, உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தமிழக காவல் துறையில் பணிபுரியும் போலீசாரின் முதல் தேர்வு, சட்டம் - ஒழுங்கு காவல் நிலையமாகவே உள்ளது. அதற்கு அடுத்த நிலையில், குற்றப் பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவுகளை தேர்வு செய்கின்றனர்.
'கட்டிங்' கிடைக்கும் என்பதால், இந்த இடங்களில் பணிபுரிய போலீசார் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. சி.பி.சி.ஐ.டி., உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் போலீசாரும், விருப்ப அடிப்படையில் சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு பணிக்கு வருகின்றனர்.
அத்துடன், கியூ பிரிவு, சிவில் சப்ளை சி.ஐ.டி., - சைபர் குற்றத்தடுப்பு பிரிவு, சிலை திருட்டு தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுகளில், எப்போதும் ஆட்கள் பற்றாக்குறை நீடிக்கிறது.
இப்பிரிவுகளில் பணிபுரிவதை போலீசார் தண்டனையாகவே கருதுகின்றனர். அதனால், சிறப்பு பிரிவு பணிகளில் தேக்கம் ஏற்படுகிறது.
எனவே, காவல் துறைக்கு இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வு பெறுபவர்கள், சிறப்பு பிரிவுகளில் மூன்று ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட உள்ளது.
போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'காவல் நிலையம் மற்றும் சிறப்பு படைக்கு, தனியாக இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்வது போல, சிறப்பு பிரிவுகளுக்கும், அந்த நடைமுறையை பின்பற்றலாம் என்ற திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.
'அத்துடன், புதிதாக இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் சேருபவர்கள், சிறப்பு பிரிவுகளில் மூன்று ஆண்டுகள் கட்டாயம் பணிபுரியும் நிலையை உருவாக்க ஆலோசனை நடந்துள்ளது' என்றனர்.