தேசிய கொடி வடிவில் கேக் வெட்டியதால் புதிய சர்ச்சை
தேசிய கொடி வடிவில் கேக் வெட்டியதால் புதிய சர்ச்சை
ADDED : ஆக 16, 2025 02:08 AM

ராமநாதபுரம்: சுதந்திர தின விழாவில், தேசியக்கொடி வடிவில் காட்சிப்படுத்தப்பட்ட 79 கிலோ கேக்கை கலெக்டர், எஸ்.பி., வெட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், 79 கிலோ 'கேக்' காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த கேக், 16 அடி நீளம், 3.25 அடி அகலம் இருந்தது. போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பின், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ், கூடுதல் கலெக்டர் திவ்யான்ஷீநிகம் உள்ளிட்டோர் அசோக சக்கரத்துடன் கூடிய மூவர்ணக்கொடி வடிவில் அமைக்கப்பட்ட கேக்கை வெட்டினர்.
சுதந்திர தினத்தன்று, தேசியக்கொடி வடிவில் இருந்த கேக்கை உயர் அதிகாரிகளே வெட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். உரிய மரியாதையுடன், தேசியக்கொடி வடிவில் கேக் வெட்டுவது தவறில்லை என, 2021 மார்ச் 22ல், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒரு தீர்ப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.