இன்ஜி., கல்லுாரிகளுக்கு புது பாடத்திட்டம்: வெளிநாட்டு மொழிகளை கூடுதலாக கற்க உத்தரவு
இன்ஜி., கல்லுாரிகளுக்கு புது பாடத்திட்டம்: வெளிநாட்டு மொழிகளை கூடுதலாக கற்க உத்தரவு
ADDED : ஆக 28, 2025 01:37 AM

சென்னை: இன்ஜினியரிங் படிப்புகளுக்கு, நடப்பு கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் புதிதாக ஜப்பான், ஜெர்மனி, கொரியா ஆகிய மூன்று மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கற்க வேண்டும் என, அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலை, தன் கட்டுப்பாட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான பாடத்திட்டங்களில், மாற்றங்களை ஏற்படுத்த முடிவு செய்தது.
பாராட்டு சான்றிதழ்
இதற்காக, கல்வியாளர்கள், தொழில் நிபுணர்கள், விஞ்ஞானிகள், முன்னாள் மாணவர்கள் அடங்கிய பாடத்திட்டக் குழு அமைக்கப்பட்டு, புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன.
இந்நிலையில், பல் கலையின் கல்வி திட்டக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில், மாற்றம் செய்யப்பட்ட பாடத்திட்டங்களை, நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, புதிய பாடத்திட்டங்கள் அறிமுகமாகி உள்ளன.
இது குறித்து பல்கலை வெளியிட்ட அறிக்கை:
இன்ஜினியரிங் புதிய பாடத்திட்டத்தில், 'புராஜெக்ட் டெவலப்மென்ட்' எனப்படும், திட்ட மேம்பாடு தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.
இதில், கூடுதல் மதிப்பெண் பெறுவோருக்கு, இன்ஜினியரிங் பட்டத்துடன், கூடுதலாக சிறப்பு பட்டம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், இணைப்பு கல்லுாரிகளில் வெளிநாட்டு மொழி பாடமும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன்படி, மாணவர்கள் ஜப்பான், ஜெர்மனி, கொரியா ஆகிய மூன்று மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து, அதன் அடிப்படை திறன்களை கற்க வேண்டும்.
இது, அதிகரித்து வரும் உலகளாவிய இணைப்புகளில், மாணவர்களின் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தும். பல வகை சர்வதேச சூழல்களுக்கு மாணவர்களை தயார் படுத்தும்.
'நான் முதல்வன்'
மேலும், இரண்டு செமஸ்டர்களில் தொழில் துறை சார்ந்த பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தொழில் துறை சார்ந்த வல்லுநர்கள் வாயிலாக, 'ரீ இன்ஜினியரிங் ஆப் இனோவேஷன்' எனப்படும், புதுமை பாங்கிற்கான மறு பொறியியல் என்ற பாடம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். இதன் வழியே மாணவர்கள் தொழில் துறை நடைமுறைகளை நன்கு அறிந்து கொள்ள முடியும்.
தமிழக அரசின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திறன் சார்ந்த பாடங்களும், பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. ஆசிரியர்களின் திறன் வளர்ச்சிக்காக, தீவிரமான பயிற்சி திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
இளநிலை இன்ஜினியரிங் பாடத்தில், வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் குறித்த பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
இதன் வழியே மாணவர்கள், 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், தரவு அறிவியல் போன்ற முன்னணி தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள முடியும்.
இந்த புதிய தொழில்நுட்ப பாடங்களில், திட்ட அடிப்படையிலான கற்றல் மற்றும் நேரடி செயல்முறை பயிற்சிகள் கட்டாயம் இடம் பெறும்.
மேலும், காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை குறித்த பாடமும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
முதல் முறையாக மாணவர்களின் விளையாட்டு திறனை வளர்க்கவும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு உடற்தகுதியை மேம்படுத்தவும், இன்ஜினியரிங் பாடத்திட்டத்தில் உடற்கல்வி படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய பாடத்திட்டம், பட்டதாரி மாணவர்களின் வேலை மற்றும் மேற் படிப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.