மீட்டர் தட்டுப்பாட்டு காரணமாக புதிய மின் இணைப்பு தாமதம்
மீட்டர் தட்டுப்பாட்டு காரணமாக புதிய மின் இணைப்பு தாமதம்
ADDED : ஜன 22, 2025 12:39 AM
சென்னை:'ஸ்மார்ட்' மீட்டர் திட்டத்துக்கான, 'டெண்டர்' ரத்து செய்யப்பட்டதால், மீட்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், புதிய மின் இணைப்பு வழங்குவது மற்றும் குறைபாடு உடைய மீட்டர்களை மாற்றும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மின் ஊழியர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று, மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர்.
இதில், தவறுகள் நடக்கின்றன. எனவே, ஆளில்லாமல் தொலைத்தொடர்பு வசதியுடன் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தி, பத்து ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 2023ல், 'டெண்டர்' கோரப்பட்டது. இதனால், வழக்கமான மீட்டர்கள் கொள்முதல் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் ரத்து செய்யப்பட்டதால், மீட்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின் ஊழியர்கள் கூறியதாவது:
ஒரு பிரிவு அலுவலகத்தில் புதிய மின் இணைப்புக்கு மாதம், 100 விண்ணப்பம் பெறப்பட்டால், பாதி கூட மீட்டர்கள் தருவதில்லை.
குறைபாடு உடைய மீட்டர்கள், 200 இருந்தால், அதை மாற்றவும் மீட்டர்கள் தருவதில்லை. இதனால், புதிய மின் இணைப்பு வழங்குவது, குறைபாடு உடைய மீட்டர்களை மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த ஆண்டு இறுதியில், 12 லட்சம் ஒரு முனை மீட்டர்கள் வாங்க ஆணை வழங்கப்பட்டது. இந்த மீட்டர்கள் பிரிவு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன; மின் இணைப்பு வழங்க தாமதம் செய்யும் அலுவலகம் குறித்து, விண்ணப்பதாரர்கள் புகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.