வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் புதிய அம்சங்கள்; நாளை மறுதினம் துவக்கம்; வீடு தேடி அதிகாரிகள் வருவர்
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் புதிய அம்சங்கள்; நாளை மறுதினம் துவக்கம்; வீடு தேடி அதிகாரிகள் வருவர்
ADDED : நவ 02, 2025 10:05 AM

கோவை: 100 சதவீத தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் வகையில் சிறப்பு தீவிர திருத்தப் பணி, நாளை மறுதினம் (4ம் தேதி) துவக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் 32.25 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். 3,568 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொருவரும் வீடு வீடாகச் சென்று, பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பிரிவினர் கூறியதாவது: 2025 அக். 27ல் பட்டியலில் இருந்த வாக்காளர்கள் அனைவரது வீட்டுக்கும் அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வருவர்.
வாக்காளரின் பெயர், பூத் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் புகைப்படத்துடன் கூடிய இரண்டு படிவங்கள் வழங்கப்படும். அதிலுள்ள 'க்யூஆர்' கோடு ஸ்கேன் செய்யும்போது, படிவம் வினியோகிக்கப்பட்டதாக, ஆணைய செயலியில் பதிவாகும். படிவத்தில் கேட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். புதிய போட்டோ இணைக்க வாக்காளர் விரும்பினால், அதற்குரிய பகுதியில் ஒட்ட வேண்டும். மீண்டும் வீட்டுக்கு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் வரும்போது, பூர்த்தி செய்த ஒரு படிவத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்.
இன்னொரு படிவத்தில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் கையெழுத்திட்டு, ஒப்புகைச்சீட்டாக, மீண்டும் வாக்காளரிடமே தருவார். அப்படிவத்தை பெறும்போது, 'க்யூஆர்' கோடு மீண்டும் ஸ்கேன் செய்யப்படும். இப்போது, ஆணைய செயலியில், திரும்ப பெறப்பட்டது என பதிவாகும்.
நிரந்தரமாக இருக்கணும் சில இடங்களில் கிராமப்புறங்களில் பெற்றோர் வசிப்பர்; மகன்/ மகள் நகர்ப்புறங்களில் இருப்பர். அவர்களுக்கான ஓட்டுரிமை கிராமப்புறத்தில் இருக்கும். அவர்களுக்கான படிவத்தை பெற்றோர் பெற்று, அவர்களே பூர்த்தி செய்து கொடுக்கலாம். அதேநேரத்தில், நகர்ப்புறத்தில் வசிக்கும் வீட்டு முகவரியை குறிப்பிட்டு, படிவம் 6 கொடுக்கக் கூடாது.
நகர்ப்புறத்திலும் ஓட்டுரிமை இருக்கிறது; கிராமத்திலும் ஓட்டுரிமை இருக்கிறது என்றால், எந்த இடத்தில் நிரந்தரமாக இருக்க வேண்டுமென முடிவெடுக்க வேண்டும். அந்த இடத்தில் மட்டும் சேர்க்கப்படும்; மற்றொரு இடத்தில் நீக்கப்படும்.
புதிதாக சேர்க்க விதிமுறை குடும்பத்தில் 18 வயதானவரின் பெயரை பட்டியலில் புதிதாக சேர்க்க வேண்டுமெனில், வீட்டுக்கு வரும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் 6 பெற்று, பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பெற்றோரின் வாக்காளர் அடையாள அட்டை எண்களை தவறாமல் குறிப்பிட வேண்டும்.
அதை ஆதாரமாகக் கொண்டு சேர்க்கப்படும். டிச. 9ல் வெளியிடப்படும் வரைவு பட்டியலில், புதிய வாக்காளர்களின் பெயர் இடம் பெறாது. பிப். 7ல் வெளியிடப்படும் இறுதி பட்டியலில் இடம் பெற்றிருக்கும். மூன்று முறை 'விசிட்' ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் வீட்டுக்கு வரும்போது, பூட்டியிருந்தாலோ அல்லது வேலைக்குச் சென்றிருந்தாலோ வேறொரு நாளில் படிவம் வழங்கப்படும். அக்குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யாரிடமும் வழங்கப்பட மாட்டாது. படிவம் பெறாதவர்கள் வீட்டுக்கு மூன்று முறை வருவார்; மூன்று முறையும் சந்திக்க முடியாவிட்டால், அவர்களது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
வேலை அல்லது படிப்பு விஷயமாக, சிலர் வெளிநாட்டில் வசிக்கலாம் அல்லது முப்படைகளில் பணிபுரியலாம். அவர்கள் தங்களது பெயர் பட்டியலில் தொடர, ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

