பதவியை தேர்வு செய்யும் முறை குரூப் 4 விண்ணப்பத்தில் புதுமை
பதவியை தேர்வு செய்யும் முறை குரூப் 4 விண்ணப்பத்தில் புதுமை
ADDED : பிப் 01, 2024 02:37 AM
சென்னை:குரூப் 4 தேர்வில், தங்களுக்கான பதவியை தேர்வு செய்யும் முறையை, டி.என்.பி.எஸ்.சி., முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது.
அரசு துறைகளில் காலியாக உள்ள, குரூப் 4 பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் 4 போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் இந்தத் தேர்வு நடக்க உள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று முன்தினம் துவங்கியது. பிப்ரவரி, 28 வரை விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கான, 6244 காலியிடங்களில், எந்தெந்த பதவிகள் எந்த துறைகளில் உள்ளன. எத்தனை இடங்கள் உள்ளன என்ற விபரம், டி.என்.பி.எஸ்.சி.,யின் அறிவிக்கையில் பட்டியலிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், விண்ணப்பம் பதிவு செய்வதற்கான வழிமுறைகள், நிபந்தனைகள் குறித்த குறிப்புகளும், தனியாக இடம் பெற்றுள்ளன. அதில், எந்த துறையில் பணியாற்ற விருப்பம் என்பதை குறிப்பிடும் பகுதியும் அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது.
அதாவது, வன காப்பாளர் என்ற பதவியில், 363 காலியிடங்களும், வனக்காவலர் பதவியில், 814 காலியிடங்களும் உள்ளன. இந்த பதவிகளில் மட்டும் சேர விரும்பினால், அதற்கான விருப்பத்தை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
அனைத்து பதவிகளிலும் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்ய தயாராக இருந்தால், அதற்கான விருப்பத்தையும், வனத்துறை பதவி வேண்டாம் என்றால், அதையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.