பல்நோக்கு வசதியுடன் புதிய கப்பல் இந்திய கடற்படையில் அறிமுகம்
பல்நோக்கு வசதியுடன் புதிய கப்பல் இந்திய கடற்படையில் அறிமுகம்
ADDED : அக் 16, 2024 01:21 AM

சென்னை:சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில், பல்நோக்கு வசதியுடன் செயல்படும் புதிய கப்பலை, இந்திய கடற்படை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய கடற்படைக்கு பல்நோக்கு கப்பல்களை தயாரிக்க, ராணுவ அமைச்சகம் மற்றும், 'எல் அண்டு டி' நிறுவனம் இடையே, 2022 மார்ச் 25ல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி தயாரிக்கப்பட்டுள்ள, 'ஐ.என்.எஸ்., சமர்தக்' என்ற புதிய கப்பல் துவக்க விழா, காட்டுப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது.
இந்திய கடற்படை தலைமை தளபதி தினேஷ் கே திரிபாதி தலைமை வகித்தார். அவரது மனைவியும், கடற்படை மனைவியர் நலச்சங்க தலைவருமான சசி திரிபாதி புதிய கப்பலை துவக்கி வைத்தார்.
இந்த கப்பல், 107 மீட்டர் நீளம், 18.6 மீட்டர்அகலம் மற்றும் 3,750 டன் எடை உடையது. மத்திய அரசின், 'மேக் இன் இந்தியா' முன்முயற்சி மற்றும், 'ஆத்மநிர்பர் பாரத்' என்ற இந்திய அரசின் தொலைநோக்கு திட்டத்தின் கீழ், எல் அண்டு டி நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த புதிய கப்பல், பல்வேறு பிரிவுகளுக்கான தளங்களில், நுணுக்கமாக செயல்படும் வகையில் பிரத்யேகமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறை ஆயுதங்கள் மற்றும் இந்திய கடற்படைக்கான, 'சென்சார்'களை உருவாக்குவதற்கான சோதனை தளமாகவும் இருக்கும்.
தரைவழி மற்றும் வான்வழி இலக்குகளின் ஏவுதல், மீட்புப்பணி, கடலோர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.