பார்த்தீனியம் செடிகளை அழிக்க இயக்கம் : உருவாக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு
பார்த்தீனியம் செடிகளை அழிக்க இயக்கம் : உருவாக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு
ADDED : ஆக 11, 2011 12:06 AM
சென்னை : ''பார்த்தீனியம் செடிகளை ஒழிக்க இயக்கம் உருவாக்கி அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்,'' என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டசபையில் கேள்விநேரத்தின் போது உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், ''பார்த்தீனியம் செடியினால் மனிதர்களுக்கு தோல் வியாதியும், கால்நடைகளுக்கு காய்ச்சலும், நிலத்திற்கு பாதிப்பும் ஏற்படுகிறது. விவசாய நிலங்களை பாதுகாத்திட பார்த்தீனியம் செடியை அழிப்பதற்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மூலம் இயக்கம் உருவாக்கி நடவடிக்கை எடுக்கப்படுமா?'' என்ற கேள்வியை எழுப்பினார். உடனே முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்கையில், ''உறுப்பினர் தெரிவித்த யோசனை நல்ல யோசனை. பார்த்தீனியம் செடியை அழிக்கும் இயக்கத்தை உருவாக்கி, தமிழகம் முழுவதும் அச்செடிகளை ஒழிக்க தேவையான நடவடிக்கையை அரசு உடனே மேற்கொள்ளும்,'' என்றார்.

