'பட்டாசு ஆலை வெடி விபத்துகளை தடுக்க ஆறு மாதங்களில் புதிய திட்டம்'
'பட்டாசு ஆலை வெடி விபத்துகளை தடுக்க ஆறு மாதங்களில் புதிய திட்டம்'
ADDED : பிப் 19, 2024 07:53 AM

திருச்சி: ''பட்டாசு ஆலை மற்றும் கிடங்குகளில் வெடி விபத்துகளை தடுக்க, ஆறு மாதங்களுக்குள் புதிய திட்டங்கள் வகுக்கப்படும்,'' என, தீயணைப்பு துறை இயக்குனர் ஆபாஷ்குமார் தெரிவித்தார்.
திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கான மாநில விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி, அவர் கூறியதாவது:
தீயணைப்பு துறையில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்படும். தமிழக தீயணைப்பு நிலையங்களுக்கு புதிதாக ரோபோ, பைபர் படகு, ஜே.சி.பி., உட்பட நவீன இயந்திரங்கள், உபகரணங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
பட்டாசு ஆலை மற்றும் கிடங்குகளில் ஏற்படும் தொடர் விபத்துகள் கவலை அளிக்கின்றன. இது தொடர்பாக, தலைமை செயலருடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பட்டாசு கிடங்குகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.
பெரிய வெடி மருந்து கிடங்குகள் மற்றும் நிறுவனங்களுக்கு, மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் தான் உரிமம் வழங்குகிறது. தீயணைப்பு துறை சார்பில், சிறிய கடைகளுக்கும், நிறுவனங்களுக்கும் மட்டுமே உரிமம் வழங்கப்படுகிறது.
பட்டாசு ஆலை மற்றும் கிடங்குகளில் வெடி விபத்துகளை தடுக்க, ஏற்கனவே பல முன்னெச்சரிக்கை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இருப்பினும், கலெக்டர், எஸ்.பி., மற்றும் தீயணைப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து, ஆறு மாதங்களுக்குள் புதிய திட்டங்கள் வகுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

