அடுக்குமாடி வீடு விற்பனை பதிவில் வருகிறது புதிய நடைமுறை? ரியல் எஸ்டேட் ஆணையம் நடவடிக்கை
அடுக்குமாடி வீடு விற்பனை பதிவில் வருகிறது புதிய நடைமுறை? ரியல் எஸ்டேட் ஆணையம் நடவடிக்கை
ADDED : ஆக 01, 2025 09:39 PM
சென்னை:அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், வீடு விற்பனையின் போது பரப்பளவை கணக்கிடுவதில், தற்போது உள்ள மூன்று வகையான முறைகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை, ரியல் எஸ்டேட் ஆணையம் துவக்கி உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தும் போது, அதில் வீடுகள் விற்பனையில், எந்த அடிப்படையில் பரப்பளவை கணக்கிடுவது என்பதில் தெளிவு ஏற்படாமல் உள்ளது.
பொதுவாக, அடுக்குமாடி திட்டங்களில், நிலத்தில் பிரிபடாத பங்கான யு.டி.எஸ்., அடிப்படையில் கிரய பத்திரமும், மொத்த கட்டுமான பகுதி அடிப்படையில் கட்டுமான ஒப்பந்தமும் பதிவு செய்யப்பட்டு வந்தது.
அமலுக்கு வந்தது
இதன்பின், யு.டி.எஸ்., மற்றும் கட்டடத்தின் பரப்பளவு சேர்ந்த ஒருங்கிணைந்த பத்திரமாக பதிவு செய்யும் நடைமுறை, 2023ல் அமலுக்கு வந்தது.
ஆனால், அடுக்குமாடி திட்டங்களில், நான்கு சுவர்களுக்கும் இடைப்பட்ட பகுதியான, 'கார்பெட் ஏரியா' அடிப்படையில் மட்டுமே பரப்பளவை கணக்கிட வேண்டும்; அதன் அடிப்படையிலேயே விலையை தெரிவிக்க வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அடுக்குமாடி கட்டடங்களுக்கு, எப்.எஸ்.ஐ., எனப்படும், தளபரப்பு குறியீடு அடிப்படையிலேயே பரப்பளவு கணக்கிடப்பட்டு, கட்டுமான திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு மூன்று வகை நடைமுறைகளில் வீட்டின் பரப்பளவு கணக்கிடப்படுவதால், வீடு வாங்குவோருக்கு குழப்பம் ஏற்படுகிறது.
இதுபோன்ற குழப்பங்களை தடுக்க, 'கார்பெட் ஏரியா' அடிப்படையிலேயே, அனைத்து நிலையிலும், கட்டடத்தின் பரப்பளவை கடைப்பிடிக்க வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, விற்பனையின் போது கார்பெட் ஏரியா அடிப்படையிலேயே, வீட்டின் விலையை குறிப்பிட வேண்டும் என்றும், ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
திட்டமிட்டுள்ளது
இது தொடர்பாக, கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் துறைகள், பதிவுத்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசவும் ரியல் எஸ்டேட் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:
அடுக்குமாடி திட்டங்களில் வீடு கட்ட அனுமதி பெறுவது, விற்பது போன்ற நிலைகளில், ஒரே விதமாக பரப்பளவை கணக்கிடும் நடைமுறை இருப்பது அவசியம். ஆனால், இதில் கார்பெட் ஏரியா அடிப்படையில் கணக்கிடுவதானால், வீடுகள் விலை அதிகரிக்கும்.
உதாரணமாக, தற்போது 1 சதுர அடிக்கான விலை, 5,000 ரூபாய் என்று நிர்ணயிக்கப்படும் இடத்தில், கார்பெட் ஏரியா என்று கணக்கிடும் போது, சதுர அடியின் விலை, 8,000 ரூபாய் என குறிப்பிட வேண்டிய நிலை ஏற்படும். வீட்டின் விலை உயர்ந்தது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்தும்.
வெளிப்படை தன்மை
கட்டடங்களில் சுவர்கள், பால்கனி போன்ற வசதிகளை சேர்த்து தான் விலையை நிர்ணயிக்க வேண்டும். இதில், கார்பெட் ஏரியா என்பதற்கு பதில், எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பு குறியீடு அடிப்படையில், வீடுகளின் பரப்பளவை அனைத்து நிலை யிலும் கடைப்பிடிக்கலாம்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள் கலந்து பேசி, ஒரு வழிமுறையை இறுதி செய்ய வேண்டும். அப்போது தான் இதில் வெளிப்படை தன்மை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.