ADDED : செப் 12, 2026 04:06 AM
சென்னை: தமிழக மின் வாரியத்தில் பொறியாளர், கள பணியாளர்கள் உள்ளனர். பணிக் காலத்தில் உயிரிழக்கும் பணியாளர் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு வேலை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களில், புதிய நடைமுறை அமல் படுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி, விண்ணப்பங்களில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொரு பக்கத்திலும் ஆட்சேபனை இல்லை என்று கையெழுத்திட வேண்டும்.
உறுதிமொழி ஆவணங்களில் ஒவ்வொரு பக்கத்திலும் விண்ணப்பதாரர் கையொப்பமிட வேண்டும். 18 வயது பூர்த்தி அடையாத நபர்களின் விண்ணப்பங்களுக்கு தனி பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.
மேலும், மருத்துவ காரணங்களுக்காக பணியில் இருந்து விலக்கப்படும் பணியாளர்களின் குடும்பத்தினர் கருணை அடிப்படையில் வேலை கோரும்போது, மருத்துவ சான்றிதழ் படிவத்தை கட்டாயம் பின்பற்றுமாறு, மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
