துணி கொடுத்தால் பை கிடைக்கும் மஞ்சப்பைக்கு மாற்றாக புதிய திட்டம்
துணி கொடுத்தால் பை கிடைக்கும் மஞ்சப்பைக்கு மாற்றாக புதிய திட்டம்
UPDATED : நவ 17, 2026 06:25 PM
ADDED : நவ 17, 2026 06:22 PM
சென்னை: தமிழகத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தின் பெயர் மாற்றப்பட்ட நிலையில், பொது மக்கள் துணி கொடுத்தால், பை தைத்து கொடுக்கும் திட்டம், புதிதாக அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் ஒருமுறை ப யன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, மக்களுக்கு துணியாலான மஞ்சப்பை வழங்கும் திட்டம், 2021ல் தொடங்கப்பட்டது.
இதற்காக, பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இயந்திரங்கள் நிறுவப்பட்டு, அதிலிருந்து, தானியங்கி முறையில் மஞ்சப்பை பெறும் வகையில், திட்டம் அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. தற்போது, ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற பெயர் நீக்கப்பட்டு, 'துணிப்பை திட்டம்' என்ற பெயரில் தொடர, அரசு அனுமதித்து உள்ளது.
இதன்படி, புதிதாக இயந்திரங்கள் அமைக்கும் பணிக்காக, ஒப்பந்ததாரரை தேர்வு செய்ய, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் பொது மக்கள் கூடும் இடங்களில், துணிப்பை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அதில், பொது மக்கள் கோரிக்கை அடிப்படையில், சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
இதன்படி, சென்னை கோயம்பேடு போன்ற அங்காடி வளாகங்களில், இயந்திரங்களில் வழங்கப்படும் துணிப்பையின் அளவு போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. இதற்காக, தையல் இயந்திரத்துடன், அந்தந்த இடங்களில் தனி பிரிவு அமைக்கப்படும்.
இந்த பிரிவுகளில், பொது மக்கள் துணி கொடுத்தால், அதற்கு ஏற்ற அளவுகளில் பைகள் உடனடியாக தைத்து கொடுக்கப்படும். இதற்கான ஒப்பந்ததாரரை தேர்வு செய்ய இருக்கிறோம்.
இதனால், பழைய துணிகள் மறுபயன்பாட்டுக்கு வர வாய்ப்பு ஏற்படுவதுடன், மக்களுக்கு தடையின்றி துணிப்பை கிடைக்கும் நிலையும் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
