பெண்கள் கழிவறை அருகே புதிய டாஸ்மாக்:ஐகோர்ட் மதுரை கிளை கடும் அதிருப்தி!
பெண்கள் கழிவறை அருகே புதிய டாஸ்மாக்:ஐகோர்ட் மதுரை கிளை கடும் அதிருப்தி!
ADDED : டிச 28, 2024 04:37 PM

தேனி: தேனியில் பெண்கள் கழிவறை அருகே புதிய டாஸ்மாக் அமைக்கப்படுவதைத் தடுக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை காட்டமான அதிருப்தியை தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் குமாரலிங்கம் ஐகோர்ட் மதுரைக்கிளையில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், பூதிப்புரம் ராஜபூபால சமுத்திர கண்மாய் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க திட்டமிடுவதாகவும், அந்த பகுதியில் பெண்கள் கழிவறையும், கண்மாய் கரைப்பகுதியும் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அங்கு ஏற்கனவே 3 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், 4வதாக ஒரு கடை தேவை இல்லை என்றும், புதிய டாஸ்மாக் திறப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் 'குடி குடியைக் கெடுக்கும் என்று கூறுவதால் மட்டும் என்ன பயன்? தமிழகத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளைக் குறைக்க வழியைப் பாருங்கள். அதை விட்டுவிட்டு கடைகளை அதிகரித்து வருகிறீர்கள். தற்போது மூலை முடுக்கெல்லாம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் அருகில் கூட மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன.' என்று அதிருப்தி தெரிவித்தனர்.
தொடர்ந்து, பூதிப்புரம் கண்மாய் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.