மூன்றாம் வகுப்பு வரை புதிய பாடப்புத்தகங்கள்; தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டில் அறிமுகம்
மூன்றாம் வகுப்பு வரை புதிய பாடப்புத்தகங்கள்; தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டில் அறிமுகம்
ADDED : நவ 25, 2025 06:52 AM

சென்னை: அடுத்த கல்வியாண்டில், மூன்றாம் வகுப்பு வரை புதிய பாடப் புத்தகங்களை உருவாக்க, பள்ளிக்கல்வி துறை ஆலோசித்து வருகிறது.
தமிழகத்தில், புதிய பாடத்திட்டங்களை உருவாக்க, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழுவும், இயற்கை விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில், பாடத்திட்ட வடிவமைப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளன.
ஆலோசனை பாடத்திட்ட குழுவில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ'வின் தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ் வின், கர்நாடக இசைப்பாடகி சவுமியா உள்ளிட்டோ ர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களின் ஆலோசனைப்படி, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் புதிய பாடப் புத்தகங்களை உருவாக்க உள்ளது. இந்த குழுவினர், நேற்று அமைச்சர் மகேஷ் தலைமையில், சென்னையில் ஐந்து மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
பின், அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:
மாநில பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதற்கான முதல் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில், சிறு வகுப்புகளில் உள்ள தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்கள், கதையை போல எளிமையாக கூறும் வகையில் இருக்க வே ண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
நடவடிக்கை எதையும் படித்து மனப்பாடம் செய்து தேர்வெழுதும் வகையில் இல்லாமல், சிறுவயதில் இருந்தே, அனுபவ ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் படிக்கும் வகையில் பாடத்திட்டங்கள் அமைப்பதின் அவசியம் குறித்து கருத்துக்கள் கூறப்பட்டன.
பொதுவாக, கொரோனா தொற்றுக்கு பின், கற்றல், கற்பித்தலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றையும் கருத்தில் கொண்டு, புதிய பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும். முக்கியமாக விளையாட்டு, சமூக நீதி சார்ந்த விஷயங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, கற்பித்தலில் செய்ய வேண்டிய மாற்றங்கள், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள் குறித்து, எஸ்.இ.ஆர்.டி., எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து, அடுத்தடுத்த கூட்டங்களில் விரிவாக ஆலோசித்து செயல் திட்டம் உருவாக்கப்படும். அடுத்த மாதத்தில் புதிய பாடத் திட்டம் குறித்த வரைவு உருவாக்கப்படும்.
அடுத்த கல்வியாண்டில், முதல் மூன்று வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படும். அதற்கடுத்தடுத்த ஆண்டில், 10ம் வகுப்பு வரையும், அதன்பின், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

