காதல் திருமண விவகாரத்தில் புதிய திருப்பம் எம்.எல்.ஏ.,வுக்கு ஆதரவாக வீடியோ வெளியீடு
காதல் திருமண விவகாரத்தில் புதிய திருப்பம் எம்.எல்.ஏ.,வுக்கு ஆதரவாக வீடியோ வெளியீடு
ADDED : ஜூன் 16, 2025 01:25 AM

சென்னை: காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அச்சிறுவனின் தாய், எம்.எல்.ஏ., ஜெகன்மூர்த்திக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால், அவர் மிரட்டப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த காளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகன் தனுஷ், 23. இவர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ, 21, என்பவரை காதலித்து மணந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். விஜயஸ்ரீயின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காதல் திருமண விவகாரம் தொடர்பாக, விஜயஸ்ரீயின் தந்தை வனராஜ், 55, சென்னை பூந்தமல்லி ஆண்டர்சன்பேட்டையைச் சேர்ந்த, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெகன்மூர்த்தியின் உதவியை நாடியதாகக் கூறப்படுகிறது. அவரது ஆலோசனையின்படி, ஐ.பி.எஸ்., அதிகாரியான கூடுதல் டி.ஜி.பி., ஒருவரின் காரில், தனுஷ் தம்பியான, 17 வயது சிறுவன் கடத்தப்பட்டு, மீண்டும் வீட்டின் அருகே விடப்பட்டுள்ளார்.
புகார் வாபஸ்
இது தொடர்பாக, ஜெகன்மூர்த்தியை கைது செய்ய, போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கு, புரட்சி பாரதம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், தனுஷின் தாய் லட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
என் மூத்த மகனின் காதல் திருமணம் தொடர்பாக, திருவள்ளூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தோம். மகளிர் போலீசார் விசாரித்தனர். விஜயஸ்ரீ என் மகனுடன் வருவதாக சம்மதம் தெரிவித்தார். நாங்கள் இரு வீட்டாரும் சமாதானமாக போக முடிவு செய்தோம். திருத்தணி நீதிமன்றத்திலும், நீதிபதி முன் ஆஜராகி, புகாரை வாபஸ் பெறுவதாக கூறி விட்டோம்.
கடந்த 7ம் தேதி, என் வீட்டிற்கு காரில் வந்தவர்கள், எங்கள் இளைய மகனை கடத்தவில்லை; அழைத்து சென்று சிறிது நேரத்தில் மீண்டும் கொண்டு வந்து விட்டு விட்டனர். நான் பதற்றத்தில், அவசர போலீஸ் எண் 100க்கு தகவல் தெரிவித்தேன். மறுநாள் போலீசார் என்னை அழைத்து, நாங்கள் சொல்வதை எழுதித் தாருங்கள் என எழுதி வாங்கினர்.
இப்போது, என் மகனை ஜெகன்மூர்த்தி கடத்தினார்; அவரை கைது செய்ய உள்ளோம் என்று கூறுகின்றனர். என் மகன் காதல் திருமணம் செய்ததில், எந்த தொடர்பும் இல்லாத ஜெகன்மூர்த்தியை, எதற்காக போலீசார் கைது செய்ய வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை. அவர் என்னுடன் மொபைல் போனில் கூட பேசியது இல்லை. இது தான் உண்மை.
இவ்வாறு லட்சுமி கூறியுள்ளார்.
33 பேர் மீது வழக்கு
போலீசார் கூறுகையில், 'லட்சுமியின் வார்த்தைகளில் உண்மை தன்மை இல்லை. அவர் மிரட்டப்பட்டு இருக்கலாம். இது குறித்து விசாரித்து வருகிறோம்' என்றனர்.
இதற்கிடையில், எம்.எல்.ஏ., ஜெகன்மூர்த்தியை கைது செய்ய, போலீசார் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு சென்றபோது, புரட்சி பாரதம் கட்சியினர் அங்கு குவிந்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மறியலும் செய்தனர். அதனால், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது,
சட்டவிரோதமாக கூடியது, போராட்டத்தில் ஈடுபட்டது உட்பட பல்வேறு பிரிவுகளில், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் 33 பேர் மீது, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், தலைமறைவாக உள்ள ஜெகன்மூர்த்தி, முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சென்னை அபிராமபுரம் பசுமை வழிச்சாலையில் வசித்து வரும் நீதிபதி பி.வேல்முருகன் வீட்டிற்கு, ஜெகன்மூர்த்தியின் வழக்கறிஞர்கள் சென்றனர்.
அவர் சொந்த அலுவல் காரணமாக வெளியே சென்றிருந்தார். அதை தொடர்ந்து, மனு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என, உயர் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக ஜெகன்மூர்த்தி வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
ஜெகன்மூர்த்தியை மிரட்டுவதா?
புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தியை கைது செய்வதாகக் கூறி, அவரது வீட்டிற்கு 500-க்கும் கூடுதலான காவலர்களை அனுப்பி, மிரட்டும் செயலில் தி.மு.க., அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. சிறுவன் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், அவரது பெயர் இல்லை. இத்தகைய சூழலில், அவரை கைது செய்ய முயல்வதும், அதற்காக காவலர்களை அனுப்பி இருப்பதும் அப்பட்டமான அச்சுறுத்தல்.
அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் சட்டம் - -ஒழுங்கு அத்துமீறல்கள் தடுக்கப்படவில்லை. பெண்களை அவமதித்து பேசிய முன்னாள் அமைச்சர் மீது, வழக்கு தொடரும்படி உயர் நீதிமன்றமே உத்தரவிட்ட பின்னரும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சியினரை மட்டும் மிரட்ட முனைவது சரியல்ல. இந்தப் போக்கை கைவிட்டு, சட்டம் -- ஒழுங்கை பாதுகாப்பதில், கவனம் செலுத்த வேண்டும்.
அன்புமணி,
பா.ம.க., தலைவர்