ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் புதிய 'டுவிஸ்ட்': சிக்கலில் நயினார் நாகேந்திரன்
ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் புதிய 'டுவிஸ்ட்': சிக்கலில் நயினார் நாகேந்திரன்
ADDED : மே 13, 2024 02:07 PM

சென்னை: சென்னை தாம்பரத்தில் ரயிலில், 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்கள், பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் பரிந்துரையின் பேரில், அவருக்கான எமர்ஜென்சி கோட்டா டிக்கெட்டில் ரயிலில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நயினார் நாகேந்திரனுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டவர் நயினார் நாகேந்திரன். இவர் தற்போது திருநெல்வேலி எம்எல்ஏ.,வாகவும் உள்ளார். தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பணத்தை எடுத்து வந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தமிழக பா.ஜ., துணைத்தலைவரும், திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் என்பது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம், தேர்தல் செலவுக்காக நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்றதாகவும் அவர்கள் கூறினர். இதனால் நயினார் நாகேந்திரன் மீது தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி.,க்கு மாற்றம் செய்யப்பட்டது. இதுவரை 15க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. ரயிலில் பணத்துடன் கைதானவர்கள் நயினார் நாகேந்திரன் பரிந்துரையின் பேரில், எம்எல்ஏ.,வுக்கான எமர்ஜென்சி கோட்டா டிக்கெட்டில் ரயிலில் பயணித்தது தெரியவந்துள்ளது. இது நயினார் நாகேந்திரனுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.