விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் 'ஜோர்' ரூ.10.31 கோடிக்கு டாஸ்மாக் சரக்கு விற்பனை
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் 'ஜோர்' ரூ.10.31 கோடிக்கு டாஸ்மாக் சரக்கு விற்பனை
ADDED : ஜன 04, 2024 02:58 AM
விழுப்புரம்; விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரூ.10.31 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
தமிழகத்தில் பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை அதிகரித்து வருகிறது. அதன்படி ஆங்கில புத்தாண்டிற்கு ரூ.500 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதில், வழக்கம்போல், ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மது விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 108, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 90 என மொத்தம் 198 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினசரி சராசரியாக ரூ.3 கோடி முதல் 4 கோடி வரை மதுபானம் விற்பனையாகிறது.
இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரூ.10.31 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
அதாவது, புத்தாண்டு தினத்துக்கு முந்தைய நாளான டிச.31ம் தேதி 6,944 அட்டை பெட்டி மதுபானங்கள், 4,904 அட்டை பெட்டி பீர் வகைகள் விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு ரூ. 5 கோடியே 80 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.
புத்தாண்டு தினமான ஜன.1ம் தேதி மதுபானங்கள் 5,501 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 3,349 அட்டைப்பெட்டிகளும் விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு ரூ.4 கோடியே 51 லட்சத்து 10 ஆயிரமாகும். இதன்படி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ரூ.10 கோடியே 32 லட்சம் அளவில் மதுபானம் விற்பனையாகி உள்ளது.
கடந்தாண்டு இவ்விரு மாவட்டங்களில் இருந்த 234 டாஸ்மாக் கடைகளில் புத்தாண்டிற்கு ரூ.9 கோடியே 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கு மது விற்பனை நடந்தது. தற்போது டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 198 ஆக குறைந்த போதிலும், மது விற்பனை கடந்தாண்டை விட ரூ.1.31 கோடிக்கு அதிகமாக விற்பனையாகி உள்ளது.