ADDED : அக் 24, 2025 12:35 AM
இந்திய நிறுவன செயலர் நிறுவனம் சார்பில், வரும் டிசம்பரில் நடக்க உள்ள, சி.எஸ்., எனும் நிறுவன செயலர் தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஏற்கனவே அவகாசம் முடிந்த நிலையில், வரும் நவ., 21 வரை மறு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தகுதியானோர், https://icsi.edu எனும் இணையதளம் வாயிலாக உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
சென்னை ஐ.ஐ.டி., எக்ஸிக்யூட்டிவ் எம்.பி.ஏ., படிப்புக்கான விண்ணப்ப பதிவு, கடந்த செப்., 6ல் துவங்கி, கடந்த 20ம் தேதி வரை நடந்தது. தற்போது அக்., 26ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான திறன் அறிவுத் தேர்வு, நவ., 8, 9ம் தேதிகளில் நடக்கிறது. இதற்காக, https://doms.iitm.ac.in/admission என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் மது கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது, காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கக் கோரி, வரும், 28ம் தேதி முதல், சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக, டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தலைமை வணிக மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டண்ட் கம் டைப்பிஸ்ட் உள்ளிட்ட 5,810 பணியிடங்களுக்கான, என்.டி.பி.சி., தேர்வுக்கு, அடுத்த மாதம் 20ம் தேதி வரை, https://www.rrbapply.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
நாடு முழுதும் 2026ம் ஆண்டுக்கான, ஜே.இ.இ., முதன்மை தேர்வின் முதல்கட்ட தேர்வு, ஜனவரி 21 முதல் 30ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு, இம்மாதம் துவங்கும். இதற்கு மாணவ, மாணவியர், https://jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இரண்டாம் கட்ட முதன்மை தேர்வு, ஏப்., 1 முதல் 10ம் தேதிக்குள் நடக்கும் என, தேசிய தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது.

