UPDATED : ஜூலை 31, 2014 07:01 AM
ADDED : ஜூலை 31, 2014 02:34 AM

சூலூர்:சூலூரில் விளைநிலம் இல்லாமல், 8 ஆயிரம் சதுர அடியில் கூரைத்தோட்டம் அமைத்து, காய்கறி மற்றும் கீரை சாகுபடி அபாரமாக நடக்கிறது.
கோவை மாவட்டம் சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில், கடந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மொட்டை மாடியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நிதி உதவியுடன், 8 ஆயிரம் சதுர அடியில் கூரைத்தோட்டம் அமைக்கப்பட்டது. விளைநிலம் இல்லாமல், பூச்சி மருந்து இல்லாமல், மூங்கில் கூடையில் விவசாயம் செய்யும் முறை குறித்தும், கயிறு மூலம் பந்தல் அமைக்கவும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
சவுக்கு மரத்தால் ஆன ஸ்டாண்டில், சாணம் பூசப்பட்ட மூங்கில் கூடைகளில் எரு,தேங்காய் மஞ்சி மற்றும் ஒரு மடங்கு மண் நிரப்பப்பட்டு, அவற்றில் வெந்தயக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, பாலாக்கீரை, பசலைக்கீரை, கொத்தமல்லி, பொன்னாங்கன்னி, பொதினா மற்றும் தண்டுக்கீரை வகைகள் பயிரிடப்படுகின்றன. மேலும், கத்திரி, வெண்டை, தக்காளி, அவரை, தட்டை, கொத்தவரை, முள்ளங்கி, நூல்கோல், பீட்ரூட் போன்ற காய்களும் குறைந்த தண்ணீர் கொண்டு பயிரிடப்பட்டு கடந்த ஓராண்டாக அறுவடை செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. பந்தல் காய்களான பீர்கன்காய், புடலங்காய், பாவக்காய் மற்றும் அவரைக்காயும் இங்கு விளைவிக்கப்படுகிறது. தற்போது, சூலூரை சேர்ந்த காசினி மகளிர் சுயஉதவிக் குழுவினர் கூரைத்தோட்டத்தை பராமரித்து வருகின்றனர்.
இதுபோன்ற கூரைத்தோட்டங்களை அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் செயல்படுத்தவும், தனியாரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பயிற்சி வகுப்புகளும் இங்கு நடக்கின்றன. இது குறித்து ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகன் கூறுகையில்,'இது போன்ற கூரைத்தோட்டங்களை குறைந்த செலவில் அமைக்க முடியும். குறைந்த அளவு தண்ணீர் போதுமானது. பூச்சி மருந்து இல்லாமல், இயற்கையான உரத்தை கொண்டு அதிக விளைச்சல் எடுக்க முடியும். மாவட்டத்தின் அனைத்து வட்டார உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தோட்டத்தை பார்வையிட்டுள்ளனர். தனியாரும் தங்கள் இடங்களில் கூரைத்தோட்டம் அமைக்க முன் வரவேண்டும்,' என்றார்.
ஒன்றிய சேர்மன் பாலசுந்தரம் கூறுகையில்,'ஒன்றிய அலுவலக வளாகத்தில், கூரைத்தோட்டத்தில் விளையும் காய்கறிகள் மற்றும் கீரைகள் விற்க, விற்பனை மையம் கட்டப்பட்டு வருகிறது. மையம் திறக்கப்பட்டவுடன், அருகம்புல் உள்ளிட்ட ஜூஸ் வகைகளையும் விற்க முடிவு செய்துள்ளோம்,' என்றார்.
