sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வாசிப்பை நேசிப்போம்

/

வாசிப்பை நேசிப்போம்

வாசிப்பை நேசிப்போம்

வாசிப்பை நேசிப்போம்


ADDED : ஜன 26, 2015 11:54 PM

Google News

ADDED : ஜன 26, 2015 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகின் மிகச்சிறந்த அறிஞர்களுள் ஒருவரான மாஜினி,''என்னை கடல் கடந்து கூட அனுப்பிவிடுங்கள்; ஆனால் கையில் எனக்கு பிடித்த புத்தகங்களை கொடுத்துவிடுங்கள்,'' என்றார்.

வறுமையின் கோரப்பிடியில் சிக்கினாலும் வாசிப்பதை நிறுத்தாதவர் காரல் மார்க்ஸ்.

லண்டன் நூலகத்தில் இவர் படிப்பார். பசி அதிகமாகி மயக்கமடைந்து விழுவார். முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிவிடுவர். எழுந்ததும் உணவைக்கூட பார்க்காமல் மீண்டும் படிப்பார். அப்படி உருவானதே 'மூலதனம்' (தி கேப்பிடல்) எனும் அழியாத நூல். ஈரானில் காசிம் இஸ்மாயில் என்னும் அரசன் மிகச்சிறந்த ஆட்சி நடத்தியவர். அவர் எங்கு சென்றாலும் 342 ஒட்டகங்களில் புத்தகங்களை ஏற்றிக்கொண்டு சென்று படித்தவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த உ.வே.சாமிநாத அய்யர் பழந்தமிழ் பாட்டுகளையும், சுவடிகளையும் தேடித் தேடி கண்டுபிடித்து படித்தவர். முன்னாள் முதல்வர் அண்ணாதுரையும், இளமையில் முதல் ஆளாக நூலகம் சென்று கடைசி ஆளாக திரும்பியவர்; வாசித்து வாசித்தே அறிஞரானவர் அவர். வாசிக்க, வாசிக்க நம்மிடமுள்ள அறியாமை அகலும்; யோசிக்கும் திறன் கூடும்.



ஏன் வாசிக்க வேண்டும்:

எப்போதும் தன்கையில் ஏதாவது ஒரு புத்தகத்தை வைத்திருப்பார் சட்ட மேதை அம்பேத்கர். அதனால் தான் அவர் பொருளியல் பாடத்திலும், அறிவியல் பாடத்திலும் பிஎச்.டி., பட்டம் வாங்க முடிந்தது. இங்கிலாந்தில் நடந்த வட்ட மேஜை மாநாட்டில் அவர் பேசிய பேச்சுக்கள் எல்லாம் முத்துக்களாக இருந்ததற்கு காரணம், அவர் வாசித்துப் பெற்ற கல்வி தான். புத்தகம் வாசிக்கும் ஒருவருக்கு பலவிதமான திறமைகள் கைகூடும். பிரச்னைகளை தீர்க்கும் முறை, மற்றவர்களுடன் அனுசரித்துப் போகும் திறமை, பொறுமையைக் கடைப்பிடிக்கும் திறமை போன்ற பல திறமைகளும், நற்பண்புகளும் வளரும். ஓய்வு நேரத்தில் நூலகம் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் அதைப் போல் நல்ல செயல் வேறெதுவும் இல்லை. தேவையற்ற பல பிரச்னைகளில் இருந்து தப்பலாம். பிறரைப் பற்றி பேசுவது குறையும். உலக செய்திகளில் இருந்து உள்ளூர் செய்திகள் வரை நாம் அறிய முடியும்.



வாசிப்பில் இவர்கள் இப்படி:

இரண்டாம் உலகப் போரின்போது போரைப் பார்வையிடச் சென்ற இந்தாலிய அதிபர் முசோலினி கையில் குண்டு பட்டு காயம் ஏற்பட்டது. உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் மயக்க மருந்து இல்லை. அந்த இக்கட்டான சூழ்நிலையில் முசோலினி, ''நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள். என்னிடம் ஒரு புத்தகம் உள்ளது. நான் அதை வாசிக்கிறேன். நீங்கள் சிகிச்சையை துவக்குங்கள்; வாசிக்கும் போது எனக்கு வலி தெரியாது,'' என்றாராம். நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் தான் வாங்கும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை புத்தகம் வாங்குவதற்காக செலவிட்டார். 'புத்தகம் எனது மூலதனம்' என்றவர் அவர். பகத்சிங்கை தூக்கிலிட காவலர்கள் அழைக்க சென்ற போது, லெனின் எழுதிய 'அரசும் புரட்சியும்' என்ற நூலை படித்துக் கொண்டிருந்தாராம். ''கொஞ்சம் நேரம் கொடுத்தால் இதை முடித்துவிடுவேன்,'' என்று கூறி ஆச்சரியப்படுத்தினாராம்.



எப்படி படிக்கலாம்:

இளவயதில் பாடப்புத்தகங்கள், சிறு கதைகள், நாளிதழ்களை படிக்கலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஓய்வு நேரங்களில் நூலகம் சென்று படிக்கலாம். பல நூலகங்களில் புத்தகங்களை பீரோக்களில் பூட்டு போட்டு வைத்திருப்பர். திறந்து பார்த்தால் கரையான் தின்ற புத்தகங்கள் கிழிந்து கிடக்கும். பயன்படுத்தாமல் கிழிந்து போவதை விட, பயன்படுத்தி கிழிந்து போவது மேல் என்பதை பொறுப்பாளர்கள் உணர வேண்டும். தின்பண்டங்கள், ஆடைகள் மற்றும் பொருட்களை பரிசாக கொடுப்பதை குறைத்துக் கொண்டு நல்ல புத்தகங்களை பரிசளிக்கலாம். ஒரு ஊருக்கு சென்றால் அவ்வூரின் நினைவாக ஒரு புத்தகம் வாங்கி வரலாம். வீடு கட்டும் போது வாசிப்புக்கென்றே தனி அறை ஒதுக்கி திட்டமிட்டு கட்ட வேண்டும். அது நல்ல எதிர்காலத்திற்கான முதலீடு. விழாக்களுக்கு வந்தவர்களுக்கு தாம்பூல பை தரும்போது அத்துடன் ஒரு திருக்குறள் நூலையும் தரலாம். தேங்காய் கொடுத்தால் ஒரு நாள் சமையலுக்கு உதவும். திருக்குறள் கொடுத்தால் அது ஒரு பிறவியின் குழப்பம் தீர உதவும். சினிமா, சின்னத்திரைகளில் ஆசிரியரை அல்லது பள்ளி சூழ்நிலையை குறை கூறுவது போலவோ அல்லது படிப்பவரை மட்டம் தட்டுவது போன்ற காட்சிகள் கூடாது. அது எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்திவிடும். வாசிப்பவர்களின் பேச்சில் ஒரு தன்னம்பிக்கை மிளிரும்; முகம் ஒளிரும். 'பலமே வாழ்வு; பலவீனமே மரணம்' என்ற பொன்மொழியை வாசிக்கும் போது மனதுக்குள் ஒரு உத்வேகம் ஊறும். நோஞ்சான்கூட நெஞ்சை நிமிர்த்துவதைக் காணலாம். இப்பூமியில் மனிதர்களாய் பிறந்த நாம் பொழுதை எப்படியும் கழிக்கலாம். நாளைய வரலாறு நம் வரலாற்றைச் சொல்ல வேண்டுமானால் இன்று பயனுள்ள வழியில் கழிக்க வேண்டும். அந்த பயனுள்ள வழியை வகுப்பதே வாசிப்புதான். இப்பூமியில் வசிப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள். ஆனால் வாசிப்பவர்கள் பெயர் காலம் காலமாக நிற்கும். எனவே வாசிப்பை நேசிப்பதோடு சுவாசிப்போம்.



- கடமலை சீனிவாசன், தலைவர், திருக்குறள் வாசகர் வட்டம். 94424 34413.








      Dinamalar
      Follow us