மன்மோகன் வாக்குமூலம் மூடி முத்திரை: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு
மன்மோகன் வாக்குமூலம் மூடி முத்திரை: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு
UPDATED : ஜன 28, 2015 12:30 AM
ADDED : ஜன 27, 2015 11:18 PM

புதுடில்லி: தொழிலதிபர் குமாரமங் கலம் பிர்லாவும் மற்றும் சிலரும் தொடர்புடைய நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நடத்திய விசாரணை குறித்த அறிக்கையை, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று சி.பி.ஐ., தாக்கல் செய்தது.
ஹிண்டால்கோ:
கடந்த, 2005ம் ஆண்டு, குமாரமங்கலம் பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில், ஊழல் நிகழ்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், 'வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், முடித்து வைக்க வேண்டும்' என, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதை ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், 'நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலகட்டத்தில், அந்தத் துறையின் அமைச்சக பொறுப்பை கவனித்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். எனவே, அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும்' என, உத்தரவிட்டது. இதையடுத்து, மன்மோகன் சிங்கிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் சமீபத்தில் விசாரணை நடத்தினர். இந்நிலையில், மன்மோகன் சிங்கிடம் நடத்திய விசாரணை மற்றும் வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை, சிறப்பு நீதிமன்றத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று, மூடி முத்திரையிட்ட கவரில் தாக்கல் செய்தனர்.
அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சர்மா கூறியதாவது: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் மற்றும் சிலரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என, 2014 டிசம்பர், 16ம் தேதி, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மன்மோகன் உட்பட, சிலரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை மற்றும் வழக்கின் தற்போதைய நிலை அறிக்கை தற்போது தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
திறக்கக் கூடாது:
மூடி முத்திரையிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, இந்த அறிக்கையை, வழக்கு தொடர்பான சி.பி.ஐ.,யின் விசாரணை முடியும் வரை திறக்கக் கூடாது. வழக்கின் முழு விசாரணையையும் சி.பி.ஐ., முடிக்க, இன்னும் இரு வாரங்களாகும். அதன்பின், பிப்ரவரி, 19ம் தேதி மீண்டும் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்படும். இவ்வாறு, வி.கே.சர்மா கூறினார்.
