தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வர்த்தகம் எளிமையாக மூன்றடுக்கு முறையை பின்பற்ற அரசு தீவிரம்

வர்த்தகம் எளிமையாக மூன்றடுக்கு முறையை பின்பற்ற அரசு தீவிரம்

வர்த்தகம் எளிமையாக மூன்றடுக்கு முறையை பின்பற்ற அரசு தீவிரம்


ADDED : பிப் 10, 2015 12:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2015 12:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்தியாவில் தொழில் துவங்குவதும், வர்த்தகம் செய்வதும் எளிது என்பதை, அன்னிய முதலீட்டாளர்களுக்கு தெரிவிப்பதற்காக, மூன்றடுக்கு அனுமதி முறையை பின்பற்ற மோடி அரசு ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பான வழிமுறைகளை உருவாக்குவதிலும் அக்கறை காட்டி வருகிறது.

நாடு முன்னேற்றம் காண வேண்டும் எனில், அதிக அளவில் அன்னிய முதலீடுகள் குவிய வேண்டும் என்பதை உணர்ந்துள்ள மத்திய அரசு, அதற்கான பணிகளில் அக்கறை காட்டி வருகிறது. ஆனாலும், இந்தியாவில் தொழில் துவங்க அனுமதி பெறுவதும், வர்த்தகம் செய்வதும் சிக்கலானதாகவும், பல துறைகள் சார்ந்ததாகவும் உள்ளது.

இறக்குமதி செய்தால்...:

உதாரணமாக, அமெரிக் காவின் கலிபோர்னியா நகரில் இருந்து, இந்தியாவுக்கு உணவுப் பொருள் ஒன்றை இறக்குமதி செய்தால், அந்தப் பொருளானது இந்திய துறைமுகத்தை வந்தடைந்ததும், அதன் மாதிரியானது, தலைநகர் டில்லியில் உள்ள, பி.கியூ., என, அழைக்கப்படும், 'பிளான்ட் குவாரன்டைன்' அலுவலகத்திற்கும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான - எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,க்கும் அனுப்பி வைக்கப்படும். பி.கியூ., அலுவலகத்தில் இருந்து, தடையின்மை சான்றிதழ் பெற, ஒன்று அல்லது இரண்டு நாட்களாகும். அதேநேரத்தில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அலுவலகத்திடம் இருந்து தடையின்மை சான்றிதழ் பெற, ஒரு வாரம் அல்லது அதற்கு மேலான நாட்களாகும். மேலும், உணவுப் பொருட்களுக்கான அனைத்து விதமான தடையின்மை சான்றிதழ்களையும் பெறும் வரை, அமெரிக்காவிலிருந்து கப்பலில் வந்த உணவுப் பொருள் கன்டெய்னர்கள் எல்லாம், துறைமுகங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகளிலேயே இருக்கும். தடையின்மை சான்றிதழ் பெற காலதாமதம் ஆகும் போது, சரக்குகளை ஏற்றி வந்த கப்பல்களுக்கோ அல்லது துறைமுக நிர்வாகத்திற்கோ அதிக அளவிலான கட்டணங்களை செலுத்த நேரிடும். இதற்கு காரணம், பல விதமான மற்றும் பல துறைகள் சார்ந்த ஒப்புதல் பெறும் நடவடிக்கைகள் இருப்பதே. இதுபோன்ற சிக்கல்கள் இல்லாமல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளை எளிதாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு துறையிலும் நடைமுறைகளை எளிமையாக்கி, முதலீடுகளை அதிகப்படுத்த தீர்மானித்துள்ளது.

எளிமையாக்க...:

இதுதொடர்பாக, தொழில் கொள்கை மற்றும் அபிவிருத்தி துறையானது (டி.ஐ.பி.பி.,), வர்த்தகம் செய்வதை எளிமையாக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த பட்டியல் ஒன்றை தயாரித்து, அதை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி உள்ளது.

கைவிடப்பட்டு...:

அதேபோல், வர்த்தகத் துறையும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை எளிமையாக்குவது தொடர்பாக, கடந்த டிசம்பர் மாதத்தில், அறிக்கை ஒன்றை தயாரித்து அளித்துள்ளது. இதன்படி, ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளில் பின்பற்றப்படும், அன்னிய செலாவணி கட்டுப்பாட்டு படிவ முறையானது கைவிடப்பட்டு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டணத்துடன் அது சேர்க்கப்படும். இப்படி பேப்பர் அளவில், ஒவ்வொரு துறையிலும், ஆறுக்கும் மேற்பட்ட ஆவணங்களை தயாரித்து ஒப்புதல் பெறுவது எளிமையாக்கப்பட்டு, மூன்று அல்லது நான்கு விதமான ஆவணங்களில், மூன்று கட்ட நடைமுறைகளில் ஒப்புதல் பெறுவதுடன், வர்த்தக நடவடிக்கை முடிவுக்கு வந்து விடும். இப்படி ஒவ்வொரு துறையிலும் பல கட்டமாக ஒப்புதல் நடவடிக்கைகள் இருப்பதை, மூன்று அல்லது நான்கு அடுக்கு முறைக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒப்புதல் வழங்கும் நடவடிக்கைகளில், இணையவழி நடைமுறைகளைப் பின்பற்றவும் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதுமட்டுமின்றி, வரி செலுத்துவதை எளிமையாக்கவும் முடிவு செய்யப்பட்டுஉள்ளது. இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பட்ஜெட்டில் வெளியிடலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், வர்த்தகம் செய்ய எளிதான நாடுகள் வரிசையில், முதல், 50 இடங்களில் ஒன்றை, வரும், 2017ம் ஆண்டுக்குள் பிடிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இணைய வழியில் பணப்பட்டுவாடா மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையில், தற்போது, சாலை பணிகள் உட்பட, துறை தொடர்பான பல பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு, இணைய வழியில் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, தேசிய நெடுஞ்சாலைகள் தொடர்பான பணிகளை செய்த ஒப்பந்ததாரர்கள், முதலில் தங்களுக்குரிய பில்களை, பொதுப்பணித்துறையின் வட்டார அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அங்கு பில்கள் சரிபார்க்கப்பட்டதும், அமைச்சகத்தின் பிராந்திய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு ஒப்புதல் தரப்பட்டதும், அந்த பில்லானது, பணம் செலுத்தும் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அலுவலகம் பில்களுக்கு உரிய பணத்தை, ஒப்பந்ததாரரின் வங்கி கணக்கில் செலுத்தி விடும். இந்த முறையில், முதலில் வரும் பில்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அத்துடன், ஒவ்வொரு அலுவலகமும், ஐந்து நாட்களுக்குள் பில்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என, கால அளவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us