sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜனநாயகச் சோதனைச்சாலையில்-20: இரண்டுக்கும் நடுவே

/

ஜனநாயகச் சோதனைச்சாலையில்-20: இரண்டுக்கும் நடுவே

ஜனநாயகச் சோதனைச்சாலையில்-20: இரண்டுக்கும் நடுவே

ஜனநாயகச் சோதனைச்சாலையில்-20: இரண்டுக்கும் நடுவே


ADDED : ஏப் 08, 2016 02:58 AM

Google News

ADDED : ஏப் 08, 2016 02:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் எழுதிய மூன்று நாவல் தொகையான இபிஸ் நாவல் வரிசை, நவீன இந்தியாவே அபின் மூலம் உருவானது என்ற ஒரு சித்திரத்தை அளிக்கிறது. அது ஒரு பார்வையில் உண்மை. அமிதவ் கோஷ், இலக்கியப் படைப்பாளி மட்டும் அல்ல; பொருளாதாரத்தின் வரலாற்றை எழுதும் ஆய்வாளரும் கூட.

Sea of Poppies, River of Smoke, Flood of Fire ஆகிய மூன்று நாவல்களில் இந்தியாவில் பிரிட்டிஷார் வேரூன்றிய ஆரம்ப காலத்தை அவர் சித்தரிக்கிறார். ஆப்ரிக்காவிலிருந்து கறுப்பின மக்களை பொறிவைத்துப் பிடித்து கட்டி இழுத்து அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று விற்கிறார்கள். அந்த, 'மனிதச்சரக்கு' ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அப்படியே இந்தியாவுக்கு சரக்குகள் ஏற்றிக் கொண்டு வந்தன. இங்கிருந்து ஓப்பியத்தை [அபின்] ஏற்றிக் கொண்டு சீனாவுக்குச் சென்றன.பிரிட்டிஷ் அரசு அதன் ஆதிக்க விரிவாக்கத்துக்கு, ஓப்பியத்தை மிகவும் நம்பியிருந்தது.

அவர்கள் சென்ற பகுதிகளில் எல்லாம், அபினை அறிமுகம் செய்தனர். ஆனால் தங்கள் படைவீரர்கள், அதைப் பயன்படுத்துவதை மிகக் கடுமையாகத் தடை செய்திருந்தனர். சீனாவைக் கைப்பற்றுவதற்காக வலுக்கட்டாயமாக அவர்கள், சீனாவில் அபினை அறிமுகம் செய்தனர். அதை அங்குள்ள அரசு எதிர்த்தபோது, அவர்களைப் போரில் தோற்கடித்து அபினை அங்கே பரவலாக்கினர்; சீனாவை வென்றனர். இவை ஓப்பியம் போர்கள் எனப்படுகின்றன. 1839ல் முதல் ஓப்பியம் போரும், 1856ல் இரண்டாம் ஓப்பியம் போரும் நிகழ்ந்தது.

இந்தியாவில் வேரூன்றிய பிரிட்டிஷார், இந்தியாவிலுள்ள விவசாயிகளை ஓப்பியம் பயிரும்படிச் சொல்லி கட்டாயப்படுத்தினர். ஓப்பியம் பயிரிடப்படாத வயல்களுக்கு பாசனம் மறுக்கப்பட்டது. மிகையான வரி போடப்பட்டது. விளைவாக ஓப்பியம் பயிர் பஞ்சாப், உத்தரப்பிரதேசத்தில் பெருகியது. ஓப்பியம் பிரிட்டிஷாருக்கு, அதிகாரத்தையும், பணத்தையும் அளித்தது. ஜமீன்தார்களும் கொழித்தனர். ஆனால் உணவு உற்பத்தி கடுமையாக வீழ்ச்சி அடைந்து மக்கள் பட்டினியால் செத்தனர்.

இந்த ஓப்பியம் விதைகளைச் சேகரித்து பிரிட்டிஷாருக்கு அளிக்கும் வணிகர்கள் உருவாகி வந்தார்கள். இவர்கள் பெரும்பாலும் பார்ஸிகள். இவர்கள் பெரும் கோடீஸ்வரர்கள் ஆகி, காலப்போக்கில் இந்திய முதலாளிகளாக வளர்ந்தனர். டாட்டா, பிர்லா போன்ற பார்ஸி பெருமுதலாளிகளின் உருவாக்கம், இப்படித்தான் நிகழ்ந்தது என்கிறார் அமிதவ் கோஷ். ஒருகட்டத்தில் இந்த முதலாளிகள் பிரிட்டிஷாரை மீறி வளர்ச்சி பெற்றனர். இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்கு இவர்கள் நன்கொடைகளை அள்ளிக் கொடுத்தனர்.

உண்மையில் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் இவர்களின் பங்களிப்பை நம் வரலாறு சொல்வதே இல்லை. டாட்டா, பிர்லா இருவருக்குமே நெருக்கமானவர் காந்தி. அவர்களுக்கு ஒரு கொள்கையை அவர் உருவாக்கி அளித்தார். அதை, 'தர்மகர்த்தாக் கொள்கை' என அவர் அழைத்தார். தன் செல்வத்தை பிறர் வளர்ச்சிக்காகச் செலவிடும் அறக்கட்டளையாளர்களாக பெருமுதலாளிகள் செயல்படவேண்டும் என்றார் காந்தி.

இன்றைய இந்தியாவிலுள்ள பெருமை மிகுந்த கல்வி நிறுவனங்கள் இந்த பெருமுதலாளிகளால் தொடங்கப்பட்டவை. நவீன இந்தியாவில் கல்வி, தொழில்நுட்பம், கலைகள் ஆகியவற்றுக்கான முக்கியமான பல அறநிலைகள் இவர்களுடையவை. காந்தி சொன்ன தர்மகர்த்தாக் கொள்கையின் விளைவு இது.ஆனால் இவற்றை விட முக்கியமானது, தங்கள் சொந்த லாபத்தை நோக்கமாகக் கொண்டு இவர்கள் உருவாக்கிய பெருந்தொழில்கள் இந்தியப் பொருளியலுக்கு அளித்த நன்மை. இந்தியாவின் மாபெரும் தொழில் அமைப்புகளை இவர்கள் தான் உருவாக்கினர். இவர்கள் இரும்பு உருக்கு, உள்நாட்டுப் போக்குவரத்து போன்ற துறைகளில் பெரும் முதலீடுகளைச் செய்யாமலிருந்திருந்தால், இன்றைய நவீன இந்தியாவே உருவாகியிருக்காது என்பதே உண்மை.

அப்படியென்றால் இவர்களின் பின்னணியை நாம் எப்படி தார்மீகமாக மதிப்பிடுவது? இது சிக்கலான ஒரு கேள்வி. இதை நாம் வரலாற்றுப் பார்வையுடன், நிதானத்துடன் அணுக வேண்டும்.ஒரு தேசம் வளர பெரிய முதலீடு தேவை. பெருந்தொழில்களையும், பெரும் கட்டுமானங்களையும் அப்படித்தான் உருவாக்கமுடியும். அவை இல்லையேல், அந்நாட்டுக்கு அடித்தளமே இல்லை. அதற்கு இரு வழிகள். ஒன்று, முதலாளித்துவம். முதலாளிகள் இப்படித்தான் உருவாவர். எங்கே ஈரம் இருக்கிறதோ அங்கே மரம் முளைப்பது போல வரலாற்றில் எங்கே ஒரு சின்ன வாய்ப்பு உள்ளதோ அதைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் வளர்ந்து வருவார்கள்.

எந்தப் பெருமுதலாளிக்கும் அடியில் ஒரு பெரிய சுரண்டல், ஒரு சந்தர்ப்பவாதம் இருந்தே தீரும். ஐரோப்பாவின் பெருமுதலாளிகள் எல்லாருமே அடிமை வணிகம், ஆயுத வணிகம் மூலம் உருவானவர்கள். அமெரிக்க ஜனநாயகத்தின் ஒளிமிக்க முகம் என்றால், அது ஜான் கென்னடி. அவரது மூதாதையர் கள்ளச்சாராயக் கடத்தல் தொழிலில் இருந்து பணம் சம்பாதித்தவர்கள்.இரண்டாவது வழி கம்யூனிசம். அது இந்தப் பெருந்தொழில்களை அரசாங்கமே செய்வது. அதற்குரிய முதலீட்டை, அரசே சேகரிக்கும். அந்தப் பொறுப்பை அதிகாரிகள் செய்வர். அதற்கு மக்களில் பெரும்பான்மையினரை கிட்டத்தட்ட அடிமை வேலையாட்களாக வைத்திருப்பார்கள். அவர்களுக்கு குறைந்த ஊதியத்தைக் கொடுத்து மிச்சத்தைச் சுரண்டிச் சேகரித்து முதலீடாக ஆக்குவார்கள்.

இன்றும் சீனாவில் தொழிலாளர்கள் ஒரு நகரத்திலிருந்து இன்னொன்றுக்குச் செல்ல பாஸ்போர்ட் - விசா தேவை. அவர்கள் தங்கள் முதலாளிகளை அரசு அனுமதி இல்லாமல் மாற்றிக் கொள்ள முடியாது. அவர்களுக்குரிய குறைந்தபட்ச ஊதியத்தை அரசே நிர்ணயித்து அளிக்கும். பல்லவி அய்யர் எழுதி தமிழில் வெளிவந்துள்ள, 'சீனா - விலகும்திரை' என்னும் நூலை ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம்.

இன்றைய இளைஞர் வலதுசாரியாக இருக்கலாம், முதலாளிகள் மூலம் மூலதனம் திரண்டு முதலீடாக ஆவதை அவர் ஆதரிக்கலாம். அல்லது இடதுசாரியாக இருக்கலாம். மூலதனத்தை அரசே திரட்டி முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் எண்ணலாம். எதுவானாலும் அவரே வாசித்தும் சிந்தித்தும் அந்த நிலைபாட்டை எடுக்க வேண்டும்.நான் முதலாளித்துவ ஆதரவாளன். எனக்கு அரசு அதிகாரிகளைவிட முதலாளிகளே மேல் என்னும் எண்ணமே இருக்கிறது. ஏனென்றால், முதலாளிகளை பல்வேறு பொருளாதார அமைப்புகள் கட்டுப்படுத்தும். பங்குச்சந்தை கட்டுப்படுத்தும். தொழிற்சங்கம் கட்டுப்படுத்தும். சர்வாதிகார அரசின் அதிகாரிகளை மக்கள் எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடியாது.

ஆனால் எந்த நிலைப்பாடு எடுத்தாலும் நமக்கு அதன்மேல் மூர்க்கமான நம்பிக்கை இருக்கலாகாது. அதை வரலாற்றுரீதியாக அணுகும் நிதானம் தேவை. வாசிப்பு தேவை. நான் முதலாளித்துவம் நல்லது என நினைப்பதனால் இங்குள்ள முதலாளிகள் பிரிட்டிஷ் அரசின் சுரண்டலில் பங்குபெற்று உருவானவர்கள் என்னும் உண்மையை மழுப்ப மாட்டேன். அதை உணர்ந்து எச்சரிக்கையுடன் இருப்பேன்.

இன்று வலதுசாரி முதலாளித்துவப் பொருளாதாரம் பெரும்பான்மையினரால் ஆதரிக்கப்படுகிறது. ஆனால் அதன் உருவாக்கத்தைப் பற்றிய தெளிவு நமக்கிருக்கும் என்றால் அதை ஒரு தேவதூதனாக நாம் நினைக்க மாட்டோம். அது ஒரு காட்டுயானை. உரிய முறையில் கால்சங்கிலிகள் போடப்பட்டு துரட்டியால் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அந்த கால்சங்கிலியாகவும் துரட்டியாகவும் இடதுசாரி அரசியல் இருக்கவேண்டும். 1991ல் சந்திரசேகர் இந்தியாவின் பிரதமராக இருந்தபோது பெரும்பொருளியல் நெருக்கடி ஏற்பட்டது.

இந்தியாவின் வைப்புநிதியான தங்கத்தை உலகநிதியத்திற்கு அடகுவைக்கும் முயற்சி நிகழ்ந்தது. அப்போது அதற்கெதிரான வலுவான இடதுசாரி நிலைபாடுதான் இந்தியா அதீதமுடிவுகளை எடுக்கமுடியாமல் காத்தது.அதேபோல மன்மோகன்சிங் அரசு ஊழியர் வைப்பு நிதியை அன்னிய நிதியமைப்புகளில் முதலீடு செய்வதற்கு எடுத்த முயற்சியும் இடதுசாரிகளின் எதிர்ப்பால்தான் கைவிடப்பட்டது. இல்லையேல் 2008ல் அமெரிக்காவின் பெரும்பொருளியல் வீழ்ச்சியில் இந்தியா பலத்த அடிவாங்கியிருக்கும்.

இன்று முதலாளித்துவப் பொருளியலில் நாம் கண்மண் தெரியாத பாய்ச்சலில் சென்று அடிவாங்காமல் தடுக்கும் பெரிய எதிர்சக்தி இடதுசாரிகள். படிப்படியாக நம் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அவர்களின் இடம் குறைந்துவருவது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல என்று நான் நினைக்கிறேன்.இந்தியத் தேர்தல் நேரத்தில் மூர்க்கமான ஒற்றைப்படை நிலைப்பாடுகள் உருவாகின்றன. ஒரு தரப்பினர் வலதுசாரி முதலாளித்துவத்தின் தரப்பில் நின்று இடதுசாரிகளை நாசகாரச் சக்திகள் என்பார்கள். இடதுசாரிகளை ஆதரிப்பவர்கள் முதலாளித்துவமே மோசடி என்பார்கள். இருதரப்பையும் நிதரிசனத்துடன் பார்க்கும் ஒரு வலுவான தரப்பு இளையதலைமுறையினரில் உருவாகவேண்டும். அதுவே ஜனநாயகத்தின் சுக்கான்.

ஜெயமோகன் ,கட்டுரையாளர், எழுத்தாளர்தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com www.jeyamohan.in






      Dinamalar
      Follow us