பல கட்சி ஜனநாயகத்திற்கு இனிமேல் இல்லையா எதிர்காலம்?
பல கட்சி ஜனநாயகத்திற்கு இனிமேல் இல்லையா எதிர்காலம்?
ADDED : மே 22, 2016 03:30 AM

மதுரை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள், சிறு கட்சிகளை கிட்டத்தட்ட குழி தோண்டி புதைத்து மூடி விட்டதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.எந்த தேர்தலிலும் இல்லாத சில புதுமைகள் இந்த தேர்தலில் நடந்துள்ளன. அதில் ஒன்று தான், சிறு கட்சிகளின் வாக்கு வங்கி அதல பாதாளத்திற்கு சென்றதும். உதாரணமாக, 2011 தேர்தலில் 7.88 சதவீதம் பெற்ற தேமுதிகவின் ஓட்டு, இம்முறை 2.4 சதவீதமாக தேய்ந்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓட்டு, 2011ல் 1.51 சதவீதமாக இருந்தது. அது தற்போது 0.8 சதவீதமாக சரிந்துள்ளது.
கட்சி ஆரம்பிக்கப்பட்ட புதிதில் 5 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு வங்கி வைத்திருந்த மதிமுகவின் ஓட்டு சதவீதம் இம்முறை 0.9 சதவீதமாக வீழ்ந்துள்ளது. 228 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்தது வெறும் 1.1 சதவீதம் மட்டுமே. நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டு 1.3 சதவீதம். அதாவது, இந்த கட்சிகளை விட நோட்டா அதிக ஓட்டுகளை பெற்றுள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்த மதுரை முன்னாள் வரலாற்றுத் துறை பேராசிரியர் ஒருவர், ''ஜனநாயகத்தில் பல கட்சி முறை இருந்தால் நல்லது என்று ஒரு காலத்தில் சித்தாந்தம் இருந்தது. பெரிய கட்சிகளை தட்டிக்கேட்க, வெவ்வேறு கருத்துகளை நோக்கி பொதுமக்களை ஈர்க்க என்று காரணங்கள் கூறப்பட்டது உண்டு. ஆனால் சிறு கட்சிகள் அந்த சித்தாந்தத்தை சீர்குலைத்து விட்டன.
ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு கட்சி, ஒவ்வொரு சங்கத்திற்கும் ஒரு கட்சி, வியாபாரிகளுக்கு கட்சி என, அரசியல் சித்தாந்தம் தடம் புரண்டது. இந்த தேர்தலிலும் மதிமுக, வி.சி., த.மா.கா., தேமுதிக போன்ற கட்சிகள் அமைத்த கூட்டணியே இதற்கு உதாரணம். எந்த ஒருமித்த கொள்கையோ கோட்பாடோ இக்கட்சிகளுக்கு இல்லை.
அவ்வப்போது பெரிய கட்சிகளின் தோளில் சவாரி செய்தவை இவை. அப்படிப்பட்ட கட்சிகள், திடீரென தங்களுக்குள் கூட்டணி அமைத்து போட்டியிட்டதை மக்கள் ஏற்கவில்லை'' என்றார்.கோவை பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''இனியும் இக்கட்சிகளுக்கு எதிர்காலம் இருக்குமா என்பது சந்தேகம் தான். தேசிய அளவில் எப்படி பாஜ., காங்கிரஸ் என்று இருமுனைகள் மட்டும் உருவாகிறதோ அதே போல் தமிழகத்தில் அதிமுக, திமுக என்ற இருமுனைகள் மட்டுமே களத்தில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது'' என்றார்.இனிமேல் இந்த சிறு கட்சிகள் எப்படி செயல்படும் என்பதைப் பொறுத்து தான் இவற்றுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். இல்லாவிட்டால், கொஞ்சம் கொஞ்சமாக இக்கட்சிகள் அரசியல் களத்தில் 'அட்ரஸ்' இல்லாமல் ஆகிவிடும்.
