UPDATED : ஆக 15, 2017 10:07 PM
ADDED : ஆக 15, 2017 10:06 PM

திண்டுக்கல்:
இயற்கையோடு, பண்பாட்டையும் இணைத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் வாழ்கின்றனர் திண்டுக்கல் மாவட்டம், பழநி மலை பளியர்கள்.
பாரம்பரிய பழக்கம்
குன்றவர் மன்னாடியார், பளியர்கள் தெய்வ வழிபாட்டில் அதீத நம்பிக்கை கொண்டவர்கள். இவர்கள் பூதனாச்சி, பளிச்சியம்மன், 12 தெய்வம் என வனதேவதைகளை வழிபடுகின்றனர். பூஜாரிகளை அருளாடிகள், தேராடி என்கின்றனர். புனித இடத்தில் திருமண் எடுத்து அதையே திருநீறாக பயன்படுத்துகின்றனர். தைலமரத்தில் கிடைக்கும் நறுமண பிசினை சாம்பிராணியாக பயன்படுத்துகின்றனர். அருளாடிகள் மருள்காய் எனும் நீளசாட்டையும், தெய்வ பொட்டி தலை எனும் இலையையும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் காலணி அணிவதில்லை.
தைத் திருவிழாவில் மரக்கட்டைகளை அடுக்கி நெருப்பு உண்டாக்கி அதைச்சுற்றி ஆண்களும், பெண்களும் வட்டமாக நின்று 'ஆட்டுப்பாட்டு' நடத்துவர். சந்தக் குழல் வாசிப்பும் மேளத்தின் தாளமும் ஆட்டத்திற்கு தகுந்தாற்போல் மாறிக்கொண்டே இருக்கும்.
சொகுசு வாழ்வுக்காக இயற்கையை சிதைத்து வாழும் இன்றைய நம்மூரையொட்டிதான், பல நுாறாண்டுகளாக பண்பாடு கெடாமல், இயற்கையோடு இணைந்து பழங்குடி சமூகத்தினரான பளியர் இனத்தவர்களும் வசிக்கின்றனர்.
குட்டையான உருவம், குறுகுறு நடை, கருப்பு நிறம், அடர்ந்த சுருள் முடி, சப்பை மூக்கு, தடித்த உதடு, பெரிய மூக்கு துவாரங்கள் போன்ற அடையாளங்களுடன் பளிச்சென்று தெரிபவர்கள்தான் பளியர்கள். இவர்கள் சரளமாக பேசுவதில்லை. பேச்சின் முடிவில் 'நு' என்ற உச்சரிப்பில் முடிப்பர்.
இவர்களின் வாழ்விடங்கள் திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி தோணி மலையில் துவங்கி, மேற்கு தொடர்ச்சி மலை கேரளா, இடுக்கி மாவட்டம், கோவிலுார் வட்டவடை வரை நீண்டுள்ளது. 12 கீழ்மலைகளிலும், 900 மேல்மலைகளிலும் வாழ்கின்றனர்.
36 பழங்குடிகள்
தமிழகத்தில் 7.92 லட்சம் பழங்குடியினர் உள்ளனர். இங்கு 36 வகையான பழங்குடியினர் இருந்துள்ளனர். இதில் இருளர், காட்டுநாயக்கர், குரும்பர், பன்னியான், தோடர், கோட்டாஸ், பளியர் போன்ற பிரிவுகளாக உள்ளனர். இருளர்கள் 1.90 லட்சம் பேர் உள்ளனர். அடந்த காடு, உயரமான மலைகளில் லாவகமாக ஏறி, இறங்கும் திறனும், சூது,வாது, கள்ளங் கபடமற்றவர்களாகவும் எதார்த்தமாக வாழ்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி மலையில் கீழ்மலை, நடுமலை, மேல்மலை, சிறுமலை, மூலையாறு, வடகரைப்பாறை, வடகாடு, கன்னனுார், கோட்டைவெளி, புளியங்கம், தாழையூத்துக்காடு, கவிச்சிக்கல், மான்கறை, குறவநாச்சியோடை, கோரங்கொம்பு, கடைசிகாடு, பூதமலை.
தேனி மாவட்டத்தில் போடி மெட்டு, குரங்கணி, வருஷநாடு, விருதுநகர் மகாலிங்க மலைகளில் அதிகம் வாழ்கின்றனர். பழையோர் என்பது பழமையான மூத்த குடிகளை பளியர் என அழைக்கப்படுகிறது.
பழங்குடியினர் பிரிவுகள்
அமணப் பளியர், ஊசியிலைப் பளியர், கிழக்கு பளியர், நீர்பளியர், சருகுப் பளியர், கருப்ப பளியர், தாளப்பளியர், தெய்வப்பளியர், தேக்கிலை பளியர், தேன் பளியர், வெள்ளை பளியர் போன்ற பெயர்களோடு உள்ளனர்.இன்றைய நிலையில் தெய்வப்பளியர், காட்டுப் பளியர், புதைப்பளியர், சருகுபளியர் ஆகியோர் மற்ற பிரிவினரை வழிநடத்துவோராக உள்ளனர். 'கல்காட்டு பளியர்' முன்பு மலைக்குகைகளில் தனித்தனியாக வாழ்ந்தனர்.இவர்கள் அடிக்கடி இடம் பெயர்வர். பளியர் வீடுகளில்
பிற இனத்தினரை அனுமதிப்பதுஇல்லை.
மலைவளம் காக்கும் தொழில்
இயற்கையாக கிடைக்கும் பழங்கள், கிழங்குகள், கீரைகள், ஆடு,கோழி ஆகியவற்றை உணவாக கொள்கின்றனர். ஆள்வள்ளி, முள்வள்ளி கிழங்குகளை வேகவைத்து, தேனில் தொட்டு விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் உடல் வலிமையோடு உள்ளனர். சர்க்கரை கலக்காத காபியை 'சப்பை தண்ணி' எனக்கூறி அதிகம் பருகுகின்றனர்.
முசுறு குழம்பு, ரசம்
பால்பதமுள்ள 'முசுறு' பிரதான மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது. 'முசுறு' குஞ்சுகளை சேகரித்து, அரைத்து பால் எடுத்து குழம்பு, ரசம் வைக்கின்றனர். இதை கையில் தேய்த்து முகர்ந்தாலே நோய் வராது என்கின்றனர். தேன் அடையில் வளரும் தேனீ குஞ்சுகளை பிழிந்து பால் எடுத்து குழம்பு வைக்கின்றனர். இதனால் பாலுாட்டும் பெண்களுக்கு பால் ஊறும் என்கின்றனர்.
இயற்கை அன்னையின் மடியில் தவழும் குழந்தைகளாக வாழும் இவர்கள் இயற்கை வளங்களை தமதாக்கி காடுகளை நேசித்து வாழ்கின்றனர். மரம், செடி, கொடிகளுடன் பேசுவதாக பாவித்துக் கொள்கின்றனர்.
மருத்துவ செடி, கொடிகளின் தன்மை அறிந்து அதன் மூலமாக நோயை குணப்படுத்துகின்றனர். ஈச்சம்பழம், காளப்பழம், தேன், மெழுகு, மரப்பாசி, கடுக்காய் சேகரித்து பணம் சம்பாதிக்கின்றனர்.
குறிஞ்சிப் பூ நோன்பு
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூவில் கிடைக்கும் தேன் மருத்துவ குணத்துடன், சுவையாக இருக்கும். இதனால் குறிஞ்சி பூக்கும் ஆண்டை 'பூ நோன்பு'
என விரதம் இருந்து வரவேற்கின்றனர். ஆறுமாதம் தேன் எடுத்து நிறைவு விழாவை கட்டை மறை நோன்பு என விரதம் இருந்து முடிக்கின்றனர். முன்பு 2006ல் பூத்த குறிஞ்சிப்பூ, அடுத்து 2018ல் பூக்க உள்ளது.
குளியல் வழலை நாறு
வென்னீர் குளியலில் தலைநாறு மரத்தின் உரித்த பட்டைகளை சுடுநீரில் போட்டு விடுவர். இப் பட்டை தண்ணீர் சூடான நிலையில் வழு, வழுப்பாக மாறி விடும். இந்தப் பட்டையை உடலில் 'ஷாம்பு' போல் தேய்த்து குளிக்கின்றனர். வீடுதோறும் இப் பட்டை வைத்திருக்கின்றனர். நாம் பயன்படுத்தும் சோப்பிற்கு தமிழில் 'வழலை கட்டி' என்ற பெயர் உண்டு.
சடங்கு முறை
பெண்கள் பருவ வயதுக்கு வந்தால் குடிசையில் மூன்று மாதங்கள் தனியே ஒதுக்கி வைத்துவிடுவர். அவர்களுக்கு உறவினர்கள் தினை, வரகு, சாமை போன்ற சிறுதானியங்களை உரலில் இட்டு குத்தி சுத்தம் செய்து வழங்க வேண்டும். அதில் உணவு சமைத்து வழங்கப்படும்.
மூன்று மாதங்களுக்குப்பின் வீட்டுக்கு அழைக்கும் நிகழ்ச்சியில் தாய்மாமன் கொண்டு வரும் புதுச்சேலை அணிந்து, கோழிக்கறி உணவு சுமந்து வரும் நிகழ்வு சிறப்பாக நடத்தப்படும்.
திருமணம்
பாரம்பரிய முறையில் தாய்மாமன் விரதம் இருந்து பொறை பூ கொண்டு வந்த பின் திருமணம் நடைபெறும். வட்டமாக பரப்பிய அருகம்புல் மீது நின்று தாலி கட்டுவர்.
மணமக்கள் பொய்யான வாழ்க்கை இன்றி உண்மையாக வாழ வேண்டும் என்பதை இத்திருமணம் வலியுறுத்துவதாகவும், எந்த சூழலிலும் அருகம்புல் படர்ந்து வேரூன்றி வளர்வதைப்போல் மணமக்கள் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.
இயற்கையோடு இணைந்த வாழ்வு
மலைக் கிராமங்களில் பளியர் குறித்து ஆய்வு செய்த காந்திகிராமம், கிராமிய பல்கலை பேராசிரியர், முத்தையா: வனங்களை உண்மையில் பாதுகாப்பதில் பூர்விக பழங்குடியினரின் பங்கு மகத்தானது. அவர்கள் செடி, கொடிகள், மரத்தை அளவுக்கதிகமாக நேசிக்கின்றனர். விலங்குகளுடன் உறவாடுகின்றனர். அந்தளவிற்கு இயற்கையோடு இணைந்து வாழ்கின்றனர். மூத்தோரிடம் கலைகளை ஆர்வமாக கற்றுக் கொள்கின்றனர்.
கிடைக்கும் பொருட்களைக் கொண்டே வீடு அமைத்து கொண்டு வசிக்கின்றனர். அரசின் திட்டங்கள் ஓரளவிற்கே அவர்களைச் சென்றடைந்துள்ளது. கல்வியும் முழுமையாக எட்டவில்லை என்றுதான் கூற வேண்டும். இளைஞர்களிடம் மதுப்பழக்கம் அதிகரித்து வருகிறது. கல்வியின் பயன், மதுவின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமச்சீரான உணவு கிடைக்காததால் 'ரத்த சோகை' பாதிப்பு பலருக்கு உள்ளது. எனவே, மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
பழகுவதில் இடைவெளி
பி.பழனிவேல் (ஆய்வாளர், காந்தி கிராம கிராமிய பல்கலை, காந்திகிராமம்): சங்க இலக்கியத்தில் வரும் 'தினைப்புலம்' என்ற வார்த்தை சொல்லாடல் இன்னும் வழக்கில் உள்ளது. பளியர்கள் சேகரிக்கும் தேன்,
நெல்லிக்காய், கடுக்காய், ஈச்சமாறு ஆகியவற்றுக்கு சந்தை வசதிகள் செய்து தர வேண்டும். அவர்கள், பச்சையான மரத்தை ஒருபோதும் வெட்டுவதில்லை. விறகு போன்ற பயன்பாட்டிற்கு காய்ந்து கீழே விழுந்தவற்றையே சேகரித்து பயன்படுத்துகின்றனர். பிற மக்களிடம் பழகுவதில் இடைவெளி கடைபிடிக்கின்றனர். அரசு வீடு கட்டித்தரும் திட்டங்களை உரிய காலத்தில் முடித்து தராததால், பலர் இத் திட்டத்தையே வேண்டாம் என ஒதுக்குகின்றனர். அரசின் பலன் முறையாக சென்றடைந்து அவர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும்.
பளியர் பெண்கள்கூறுவதென்ன
படிக்க வழியில்லை
ரம்யா (மாணவி, பெருங்காடு): மலைக் கிராமங்களில் பள்ளிக்கூட வசதி இல்லாததால் என்னைப் போன்ற பல சிறுமிகளின் பள்ளி செல்லும் உரிமை பாதிக்கிறது. நான் தொண்டு நிறுவன உதவியுடன் 5ம் வகுப்பு வரை படித்தேன். ஆறாம் வகுப்புக்குச் செல்ல வசதி இல்லை. என்னைப் போலவே எங்கள் பகுதி சிறுவர், சிறுமியர் பள்ளி வசதி இன்றி, காடுகளில் விளையும் காய்கனிகளையும், பிற பொருட்களையும் சேகரிக்க செல்கின்றனர். படிக்க ஆர்வம் இருந்தும் பள்ளிக்கூடம் இல்லாததால் படிப்பை தொடர முடியவில்லை.
வனவிலங்கு அச்சம்
பரமேஸ்வரி (குடும்பத்தலைவி, பெருங்காடு): எனக்கு படிக்க வழியில்லை. என் மகள் 5ம் வகுப்பு முடித்தும், தொடர்ந்து படிக்க வழியில்லை. மற்றொரு குழந்தையையும் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. எங்கள் கிராமத்தில் இருந்து 7 கி.மீ., மலைப்பாதை வழியாக நடந்துதான் பள்ளி செல்ல வேண்டும்.
யானை மற்றும் கொடிய வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பயந்து பள்ளிக்கு அனுப்புவதில்லை. எங்கள் பகுதியில் நல்ல வீடும் கிடையாது; நடக்க பாதை உட்பட அடிப்படையான எந்த வசதியுமே கிடையாது. இருண்ட வாழ்க்கையே வாழ்ந்து வருகிறோம்.
நெருங்கி பழக இயலவில்லை
தாண்டிக்குடி பளியர் இன பெண்கள் வீரமணி,28, எஸ்.தேவி, 27, என்.சுதாராணி, 26: எங்களுக்கு அடிப்படை வசதி எதுவும் இல்லை. பிளஸ் 2 வரை படித்தும் அரசு வேலை வாய்ப்பு பெற முடியவில்லை. பல ஆண்டுகளாக வசிக்கும் கூரை வீடுகள் மழைக்கு தாங்குவதில்லை. ஓட்டை வீடுகளில் சிரமத்துடன் வாழ்க்கை நடத்துகிறோம். படித்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு இல்லாததால் மற்றசமூகத்தினருடன் நெருங்கி வாழ முடிவதில்லை. வனத்தில் கிடைக்கும் தேன், நெல்லி, பாசி போன்ற பொருட்களால் குடும்பம் நடத்த போதிய வருமானம் கிடைப்பது இல்லை. நல்ல கல்வியும், அரசு பணியும் வழங்கினால் வாழ்க்கை மேம்படும்.
அனுமதி மறுப்பு
மல்லிகா (பழநிமலை ஆதிவாசிகள் விடுதலை இயக்கம், பாச்சலுார்): கொடைக்கானல் பகுதியில் புலையர், பளியர் பழங்குடிகள் அதிகம் வசிக்கின்றனர். 2006 வன உரிமை சட்டத்தில் மூத்த
குடிகளுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வனப் பகுதியில் நிலம் வழங்க வேண்டும். வனப் பகுதியில் விளையும் சிறு வன மகசூல் சேகரிக்க, அனுமதி பெறுவதற்கு ஏ,பி, படிவங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இதற்கு மூன்று தலைமுறையினர் மற்றும் 75 ஆண்டுகளுக்கு முந்தைய சான்று கேட்கின்றனர். வனத்துறையில் பொருட்கள் சேகரிப்புக்கு பிறருக்கு டெண்டர்
விடுவதை நிறுத்தி, வன பொருட்கள் சேகரிக்கும் உரிமையை ஆதிவாசி மக்களுக்கு வழங்க வேண்டும்.
மலைஜாதியினர் மக்கள் தொகை
உலகம் முழுவதும் 90 நாடுகளில் 37 கோடி மலைவாழ் பழங்குடியின மக்கள் உள்ளனர். இந்தியாவில் 2011 ஜனத்தொகையில் 10.43கோடி பேர் உள்ளனர். இது 8.6 சதவீம். இதில் மலைக் கிராமங்களில் 89.97 சதவீதம் பேர், நகர்ப்புறங்களில் 10.03 சதவீதத்தினர் உள்ளனர்.
தமிழகத்தில் 7.94 லட்சம் மலைஜாதியினர் உள்ளனர். இது தமிழக மக்கள் தொகையில் 1.1 சதவீதம். இதில் கல்வியறிவு பெற்றோர் 54.3 சதவீதம். தமிழகத்தில் 36 வகையான மலைஜாதியினரில் இருளர், காட்டுநாயக்கர், குரும்பர், பன்னியான், தோடர், கோட்டாஸ் இனத்தினர் அதிகளவில் உள்ளனர். 2001 கணக்கெடுப்பின்படி தமிழகம், கேரளாவில் பளியர் இன மக்கள் 9,520 பேர் உள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 7,771 பேர் (மலைஜாதியினரில் 9.78 சதவீதம்) உள்ளனர்.
பி.ரவி, படம்: ஏ. ரவிச்சந்திரன்