ADDED : ஆக 21, 2017 06:11 AM

அ.தி.மு.க.,வின் பழனிசாமி அணியும் பன்னீர் அணியும் மெரினாவில் உள்ள ஜெ., நினைவிடத்தில் இன்று(ஆக.,21) மாலை இணையவுள்ளன. அப்போது ஒற்றுமைக்கான உறுதிமொழியும் எடுக்கப்படுகிறது.
துணை முதல்வர்:
கட்சியை வழி நடத்த நியமிக்கப்பட உள்ள, வழிகாட்டும் குழுவில், முதல்வர் பழனிசாமி அணி தரப்பில், அவரும், அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், சி.வி.சண்முகம் ஆகியோரும் இடம் பெற உள்ளனர். பன்னீர் தரப்பில், அவரும், முன்னாள் அமைச்சர்கள், முனுசாமியும், சண்முகநாதனும் இடம் பெறுகின்றனர். முதல்வர் பதவியில் பழனிசாமி தொடர உள்ளதால், பன்னீர் செல்வத்திற்கு, துணை முதல்வர் பதவியுடன் நிதி, பொதுப்பணித்துறை இலாகாக்கள் வழங்கப்பட உள்ளன. அவரது அணியை சேர்ந்த செம்மலை, பாண்டியராஜன் ஆகியோருக்கு, முக்கிய இலாகாக்களுடன் கூடிய, அமைச்சர் பதவி தரப்படுகிறது.
இலாக்காக்கள்:
பன்னீர் அணியினருக்கு, முக்கிய இலாக்காக்கள் தர வேண்டியுள்ளதால், தினகரன் ஆதரவு அமைச்சர்களின் இலாக்காக்களை பறிக்க, பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதன்படி, ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், சரோஜா, வளர்மதி ஆகியோர் மீது உள்ள அதிருப்தியால், அவர்களிடம் உள்ள இலாகாக்களை மாற்றவும் முடிவாகி உள்ளது.
அதிர்ச்சி:
இரு அணிகளிலும், அமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடையும், எம்.எல்.ஏ.,க்களை திருப்திபடுத்த, தலா, 10 பேருக்கு, வாரியத் தலைவர் பதவியும் வழங்கப்பட உள்ளது. நீண்ட இழு பறிக்குப்பின், இரு அணிகளின் இணைப்பு உறுதியாகி விட்டதால், தினகரன் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- நமது நிருபர் -
