மனதிலுள்ள பாரம் நீங்கி விட்டது - ஓபிஎஸ்; எதிரிகளை வீழ்த்துவோம் - இபிஎஸ்
மனதிலுள்ள பாரம் நீங்கி விட்டது - ஓபிஎஸ்; எதிரிகளை வீழ்த்துவோம் - இபிஎஸ்
ADDED : ஆக 21, 2017 03:23 PM

சென்னை : சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு அணிகள் இணைப்பு நடந்தது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கைகுலுக்கி, அணிகள் இணைப்பை முறைப்படி அறிவித்தனர்.
பின்னர் நடந்த கட்சி நிவாகிகள் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், எங்களை யாரும் பிரிக்க முடியாது. நாம் அனைவரும் ஜெயலலிதாவின் ஒரு தாய் மக்கள். இணைப்பிற்கு முழு ஒத்துழைப்பு தந்த முதல்வர் பழனிசாமி, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகளுக்கும் எனது நன்றி. இனி வரும் காலங்களில் அனைவரும் ஒன்றாக இருந்து, ஆண்ட கட்சியே மீண்டும் ஆளும் புதிய சரித்திரத்தை உருவாக்கிய ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். மனதில் இருந்த பாரம் குறைந்து விட்டது. கருத்து வேறுபாடுகள் நீங்கி விட்டன. இந்த இணைப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்றார்.
பின்னர் பேசிய முதல்வர் பழனிசாமி, எம்.ஜிஆர் ஜெயலலிதா தங்களின் வாழ்நாளை முழுவதுமாக கட்சிக்காக அர்ப்பணித்தனர். உடனடியாக எடுத்த முடிவின் காரணமாக பல பேருக்கும் முறையாக தகவல் சென்றடையவில்லை. அனைத்து தொண்டர்கள், நிர்வாகிகள் சார்பாக, அனைவரின் எண்ணத்தின்படி கட்சி ஒன்றுபட வேண்டும் என்ற, ஜெயலலிதாவின் கனவு நினைவாக வேண்டும் எண்ணத்தை நிறைவேற்றி உள்ளோம்.
அதிமுக மட்டும் தான் மக்களோட மக்களாக இருக்கும் இயக்கம். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மீண்டும் ஒன்றுபடும் ஒரே கட்சி அதிமுக என்பதற்கு உதாரணம் இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளது. பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளது. பிரிந்து விடுவார்கள், இடையில் புகுந்து விடலாம் என நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை மீட்டு எதிரிகளை வீழ்த்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.
